

ஹர்திக் பாண்டியா மற்றும் கே. எல் ராகுல் விவகாரத்தில் அதிகப்படியான எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தற்போது இந்திய ’ஏ ’அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.
இந்திய அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் சமீபத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, பாண்டியா, ராகுல் இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட பிசிசிஐ, ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கவும் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், உடனடியாக இருவரும் நாடு திரும்பவும் உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்தும் ஹர்திக் பாண்டியா, கே. எல் ராகுலுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ” நான் கூறுவது அந்த வீரர் கடந்த காலத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்றோ, அல்லது எதிர்காலத்தில் அவர் எந்த தவறிலும் ஈடுபடமாட்டார் என்பது இல்லை. இதற்கு அதிகப்படியான எதிர்வினை ஆற்றாமல் தயவுசெய்து இளைஞர்களுக்கு இது தொடர்பான கற்பித்தல் முயற்சி எடுக்க வேண்டும்.
நான் எனது பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மூத்த வீரர்களிடமிருந்து நற்பண்புகளை கற்றுக் கொண்டேன். அவர்கள்தான் எனக்கு முன் உதாரணம்.
யாரும் என்னுடன் அமர்ந்து நீ இப்படிதான் நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறவில்லை. நான் அனைத்தையும் உள்வாங்கி கற்றுக் கொண்டேன்” என்றார்.