Published : 04 Jan 2019 01:31 PM
Last Updated : 04 Jan 2019 01:31 PM

8 ஆண்டுகளுக்குப்பின் வருகிறார் பீட்டர் சிடில்: இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டது. அதில் 8 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் தொடரில் வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் இடம் பெற்றுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான 14 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

டெஸ்ட் போட்டிஇந்திய அணி வீரர்களைப் பந்துவீச்சில் மிரட்ட முடியவில்லை. மெல்போர்ன், சிட்னி டெஸ்ட்களில் 400 ரன்களுக்கு மேல் குவித்து ஆஸ்திரேலிய அணியை மிரளவைத்தனர். இதனால் ஒருநாள் தொடரில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி ஒருநாள் தொடருக்கு கேப்டனான ஆரோன் பிஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளார். பந்தைச் சேதப்படுத்தும் விவகாரத்தையடுத்து துணைக் கேப்டன்களாக இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். மிட்ஷெல் மார்ஷ், அலெக்ஸ் கேரே ஆகியோர் துணைக் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் இடம் பெறாமல் இருந்த அனுபவமிக்க வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் 2010-ம் ஆண்டுக்குப்பின் இப்போது திரும்ப அழைக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடிய சிடில்  64 டெஸ்ட்களில் 214 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

மேலும், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஆகியோரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப்பின் லயன் தேர்வு செய்யப்படாமல் இருந்த நிலையில், இப்போது அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த 2ஆண்டுகளாக ஒருநாள் அணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த கவாஜாவும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கருத்தில் கொண்டு, வேகப்பந்துவீச்சாளர்கள் மிட்ஷெல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட், பாட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட், டார்கே ஷார்ட், கிறிஸ் லின் ஆகியோர் சமீபகாலமாக ஒருநாள் தொடரில் மோசமாக செயல்பட்டதால், அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் நாதன் கோல்டர் நீல் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

ஆஸ்திரேலய அணியின் தேர்வுக்குழுத்தலைவர் டிரிவோர் ஹான்ஸ் கூறுகையில், “ எதிர்வரும் உலகக்கோப்பையைக் கருத்தில் அணியைத் தேர்வு செய்துள்ளோம். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமாக விளையாடியது ஆஸ்திரேலிய அணி.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், ஐக்கிய அரபு நாடுகள் தொடர் அடுத்து மிக முக்கியமானதாகும்” எனத் தெரிவித்தார்.

முதல் ஒருநாள் போட்டி 12-ம் தேதியும் 2-வது போட்டி 15-ம் தேதி அடிலெய்டிலும், 3-வது போட்டி 18-ம் தேதி மெல்போர்னிலும் நடக்கிறது.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஷார் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்ஷ் மார்ஷ், அலெக்ஸ் கேரே, ஹேய் ரிச்சார்ட்ஸன், பில்லி ஸ்டான்லேக், ஜேஸன் பெஹரன்டார்ப், பீட்டர் சிடில், நாதன் லயன், ஆடம் ஜம்பா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x