Published : 09 Jan 2019 07:34 PM
Last Updated : 09 Jan 2019 07:34 PM

உங்கள் ஈகோவை வீட்டிலேயே விட்டு விட்டு இங்கிலாந்து தொடருக்குச் செல்லுங்கள்: ஆஸி. அணிக்கு விராட் கோலியின் அறிவுரை

காலம் மாறிவிட்டது... துணைக் கண்ட அணிகளுக்கும், கேப்டன்களுக்கும் வீரர்களுக்கும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முன்னாள், இந்நாள் வீரர்கள் அறிவுரை வழங்கிய காலமெல்லாம் முடிந்து விட்டது போலும். இதனை முடித்து வைத்தவர் இந்திய கேப்டன் விராட் கோலி, இதனால்தான் இவர் கிங் கோலி என்று அழைக்கப்படுகிறார்.

 

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு ஆஷஸ் தொடருக்குச் செல்கிறது, அங்கு எப்படி ஆட வேண்டும், என்ன மன நிலை வேண்டும் என்று ஆஸ்திரேலியாவில் முதன் முதலில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் துணைக்கண்ட கேப்டன் விராட் கோலி அவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 

“இந்த முறை இங்கிலாந்துக்குச் சென்று ஆடிய போது எனக்கு நேர்ந்த அனுபவம் என்னவெனில், அங்கு ஈகோவுடன் செல்ல வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் போகாமல் இருப்பதே நல்லது. ஏனெனில் ட்யூக்ஸ் பந்துகள் நம் ஈகோவை குழிதோண்டி புதைத்து விடும். உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும், கடினமான நேரங்களை பொறுமையுடன் கடக்க வேண்டும். நாள் முழுதும் நிற்க வேண்டும். பேட்ஸ்மென்காக பொறுமை மிகவும் அவசியம். டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய கால அவகாசம் உள்ளது.

 

பேட்ஸ்மெனாக நாம் பதற்றமாக சில வேளைகளில் ஆகி விடுவோம் என்பதால் டெஸ்ட் கிரிக்கெட் என்பதை மறந்து விடுவோம். ஆகவே விரைவில் ரன் எடுக்கப் பார்ப்போம், ஆனால் இங்கிலாந்தில் இது நடக்காது. ஆகவே கால அவகாசம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

அதாவது எத்தனை பந்துகள் ஆடினோம், எவ்வளவு ரன்கள் என்றெல்லாம் பார்க்கக் கூடாது, ஸ்கோர்போர்டை மறந்து விட வேண்டும். பொறுமை மட்டுமே அங்கு வேலை செய்யும். ரன்கள் அதிகம் எடுத்தால்தான் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல முடியும். ஆஸ்திரேலிய அணி மீண்டும் ஒருங்கிணைந்து விடுவார்கள் என்று நம்புகிறேன். இதே காலக்கட்டத்தை நாங்களும் கடந்து வந்திருக்கிறோம், என்ன செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். மனநிலைதான் அனைத்தும். இதே ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை அங்கு சென்று தன்னம்பிக்கையுடன் நம்மால் செய்ய முடியும் என்று நினைத்தால் நிச்சயம் நன்றாக ஆட முடியும்.

 

ஆஸ்திரேலிய தொடரில் அவர்கள் பவுலர்கள் மோசமாக வீசினர் என்று நான் கூற மாட்டேன், நாங்கள் திறம்பட பேட் செய்தோம், நான் மிட்செல் ஸ்டார்க்குடன் ஆடியிருக்கிறேன், அவர் திறமைசாலிதான். அவரிடம் சரியான மனநிலை உள்ளது, சில காலங்களாக ஆஸி.யின் சிறந்த பவுலராக அவர் திகழ்கிறார்.  ஆகவே அவர் மீது எழும் விமர்சனங்களின் அளவு எனக்கே ஆச்சரியத்தை அளித்தது. அவர் உங்கள் சிறந்த வீச்சாளர், அவர் என்ன செய்ய வேண்டுமென்பதை யோசிக்க கொஞ்சம் இடம் கொடுங்கள் என்றுதான் கூறுகிறேன். அவர் மீது அழுத்தத்தை ஏற்றி அவரையும் இழந்து விடாதீர்கள் என்றுதான் கூறுகிறேன். அவர் போட்டிகளை வெல்லக் கூடியவர்.” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x