

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
பிரிஸ்பனில் பகலிரவாக நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நிரோஷன் திக்வெலா 64 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 4, ரிச்சர்ட்சன் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.
தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 106.2 ஓவர்களில் 323 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. டிரெவிஸ் ஹெட் 84, லபஸ்ஷான் 81 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் சுரங்கா லக்மல் 5 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 50.5 ஓவர்களில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக திரிமானே 32, சுரங்கா லக்மல் 24, நிரோஷன் திக்வெலா 24, டி சில்வா 14 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். கருணாரத்னே 3, கேப்டன் தினேஷ் சந்திமால் 0, மெண்டிஸ் 1, திலுருவன் பெரேரா 9 ரன்களில் நடையை கட்டினர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் பாட் கம்மின்ஸ் 15 ஓவர்களை வீசி 8 மெய்டன்களுடன் 23 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். ரிச்சர்ட்சன் 2, நேதன் லயன் 1 விக்கெட் கைப்பற்றினர்.
இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக பாட் கம்மின்ஸ் தேர்வானார். கடைசி டெஸ்ட் போட்டி வரும் 1-ம் தேதி கான்பெராவில் தொடங்குகிறது.