

தென் ஆப்பிரிக்க பிட்ச்கள் அபாயகரமானவையாக இருக்கின்றன, டெஸ்ட் போட்டிகளுக்கு லாயக்கற்றதாக உள்ளது, ஆட்டம் பலமுறை வீரர்கள் காயத்தினால் நிறுத்தப்பட நேரிடுகிறது என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதற்கு தென் ஆப்பிரிக்க வீரர் தெம்பா பவுமா பதிலடி கொடுத்துள்ளார்.
கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்சில் 431 ரன்களைக் குவித்து 254 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி தன் முதல் இன்னிங்சில் 177 ஆல் அவுட் ஆகி, 2வது இன்னிங்சில் 16/1 என்று சற்று முன்வரை தடுமாறி வருகிறது.
பிட்ச் மோசமாக இருந்தாலும் தென் ஆப்பிரிக்க கேப்டன் டுபிளெசிஸ் 103 ரன்கள் எடுத்து தனது செஞ்சூரியன் 2 இன்னிங்ஸ் டக்குகளுக்கு முடிவு கட்டினார். தெம்பா பவுமா 75 ரன்களையும் குவிண்டன் டி காக் 59 ரன்களையும் எடுக்க முன்னதாக தொடக்க வீரர் மார்க்ரம் 79 ரன்களை எடுத்துள்ளார். இப்படியிருக்கையில் பிட்ச் அபாயகரமானது என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியது சரியல்ல என்பது தென் ஆப்பிரிக்க வீரர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்நிலையில் 75 ரன்கள் அடித்த தெம்பா பவுமா கூறியதாவது:
இது சவாலான, இரண்டகத்தனமான ஒரு பிட்ச் அவ்வளவே. செஞ்சூரியனை ஒப்பிடும்போது இது இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகம் கொண்டுள்ளது. சவாலான பிட்ச் ஆனால் ஆடவே சாத்தியமில்லாத பிட்ச் என்று கூறுவதற்கில்லை.
ஒரு பேட்ஸ்மெனாக நாம் எப்போதும் சிலபல அடிகளை உடலில் வாங்கத் தயாராகவே இருக்க வேண்டும். இந்தப் பிட்ச் அபாயகரமானதெல்லாம் இல்லை. ஏனெனில் டுபிளெசிஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார், நானும் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன்.
என்று ஆர்தருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.