Published : 28 Jan 2019 06:55 PM
Last Updated : 28 Jan 2019 06:55 PM

4-ம் நிலையில் யார்? தோனி, ராயுடு, தினேஷ் கார்த்திக்? - விராட் கோலி மனம் திறப்பு

கடந்த 11 ஒருநாள் தொடர்களில் 10 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது, ஆனாலும் நம்பர் 4-ல் திடமான ஒரு வீரர் தேவை என்ற விவாதம் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

 

கடந்த அக்டோபரில் கேப்டன் விராட் கோலி 4ம் நிலைக்கு அம்பாத்தி ராயுடு களமிறங்க ஆதரவு தெரிவித்தார், ஆனால் பிறகு ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சி வந்த போது அவர் 4-ம் நிலைக்கு தோனியே சிறந்த தெரிவு என்று கூறியுள்ளார்.

 

இன்னமும் டாப் 3 வீரர்கள் போடும் அடித்தளத்தை மட்டுமே இந்திய அணி நம்பியிருக்கிறது, இந்நிலையில் 4ம் நிலையில் இறங்கும் வீரருக்கு இருக்கும் ஒரு சவால் என்னவெனில் இலக்கை நிர்ணயிக்கும் போது என்ன இலக்கு என்பதை அவர் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், அந்தக் குறிப்பிட்ட பிட்சில் என்ன இலக்கு நிர்ணயித்தால் சரியாக இருக்கும் என்று கணக்கிட வேண்டும், திட்டமிட வேண்டும்.

 

அதே வேளையில் இலக்கை விரட்டும் போது 300-320 ரன்கள் அல்லது அதற்கும் மேலான இலக்கை விரட்டும்போது 33-35 ஓவர்கலில் 200-220 ரன்களை எட்டிவிட்டால் தோனி, தினேஷ் கார்த்திக், ராயுடு அல்லது கேதார் ஜாதவ், பாண்டியா உள்ளனர், ஆனால் முதல் 3 வீரர்கள் சரியாக ஆடாமல் 50/3 என்று 12 ஒவர்களில் காலியானால் 4ம் நிலை வீரர் ஒருவர் சதம் பெரிய சதம் அடித்து 320-325 இலக்கை விரட்டும்படி இருக்க வேண்டும். இந்நிலையில் 4ம் நிலை வீரர் யார் என்ற விவாதத்தை மீண்டும் தொடங்கிய விராட் கோலி இன்று கூறியதாவது:

 

“கடந்த 5 போட்டிகள்... இங்கு 3 ஆஸ்திரேலியாவில் 2 போட்டிகளைப் பார்த்தோமானால் 4ம் நிலை வீரரைத்தான் திடப்படுத்த வேண்டியுள்ளது. ராயுடு நன்றாக ஆடும்போது அவர்தான் சரி என்று நம்பிக்கை வருகிறது. தினேஷ் கார்த்திக்கும் பெரிய பார்மில் இருக்கிறார், தேவைப்பட்டால் அவரையும் 4ம் நிலைக்கு உயர்த்தலாம். அதாவது மிடில் ஆர்டரை மாற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் தினேஷ் ஒரு தெரிவாக உள்ளார். எம்.எஸ். தோனி பந்தை நன்றாக அடித்து வருகிறார். ஆகவே அனைவருமே நல்ல நிலையில் இருப்பதால் இந்த 3 போட்டிகளிலும் பார்க்கும்போதும் 4ம் நிலை பற்றிய கவலை இப்போதைக்கு இல்லை என்றே கருதுகிறோம்.

 

இலக்கை விரட்டும்போது பெரிய இலக்காக இருந்தால் எப்படியும் இலக்கை நோக்கித்தான் பேட்டிங் இருக்கும். ஆனால் முதலில் பேட் செய்யும் போது என்ன இலக்கு நிர்ணயிப்பது என்பது நமக்கு தெரியாது. அது களத்தில் அந்தச் சமயத்தில் ஆடுபவர்கள் நிர்ணயிப்பது. இருவரில் யார் பவுலிங்கை அடித்து ஆடுவது யார் கடைசி வரை நிற்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். இங்குதான் இருவருக்குமிடையேயான் புரிதல் தொடர்பு முறை சரியாக இருக்க வேண்டும். அதுதான் அணியின் இலக்காக இருக்கும். நமக்கு மட்டுமல்ல உலகம் முழுதும் இப்படித்தான். பெரிய ஸ்கோர்களை அடிக்கும் எந்த அணியும் இந்த இடத்தில்தான் முடிவு எடுக்கிறார்கள்.

 

இந்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று விட்டோம் என்று நினைக்காமல் தொடர்ந்து ஓய்வு இல்லாமல் தீவிரத்துடன் வீரர்கள் ஆடுகின்றனர்.  பவுலிங் நன்றாக உள்ளது ஷமி நல்ல வேகம் வீசுகிறார், புவனேஷ்வர் நல்ல இடங்களில் வீசுகிறார். இன்று ஹர்திக் சிறப்பாக வீசினார், குல்தீப், சாஹல் தரமான வீச்சாளர்கள். ஒட்டுமொத்தமாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x