

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான நார்மன் கார்டன் (வயது 103) காலமானார். சிறுநீரகம் பழுதடைந்ததால் நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கார்டன், ஜோகன்னஸ்பர்க்கை அடுத்த ஹில்புரோவில் உள்ள தனது வீட்டில் உயிர் நீத்தார்.
1939-ல் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளரான கார்டன் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அதன்பிறகு உலகப் போர் நடைபெற்றதைத் தொடர்ந்து அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
1939-ல் டர்பனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து இடையிலான “டைம்லெஸ் டெஸ்ட்” போட்டியில் விளையாடிய 22 பேரில் கார்டனும் ஒருவர். இதனாலேயே அவர் மிகவும் புகழ்பெற்றார். “டைம்லெஸ் டெஸ்ட்” என்பது போட்டி வெற்றி அல்லது டையில் முடியும் வரை தொடர்ந்து ஆடப்படும். தற்போதைய டெஸ்ட் போட்டியைப் போல் குறிப்பிட்ட நாட்களில் போட்டியை முடிக்க வேண்டும் என்ற வரையறை எதுவும் கிடையாது. 1939-ல்
டர்பனில் நடைபெற்ற “டைம்லெஸ் டெஸ்ட்” போட்டி மார்ச் 3-ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடைபெற்றது. அப்போது ஓவருக்கு 8 பந்துகள் வீச வேண்டும். அதில் கார்டன் 92.2 ஓவர்கள் வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ