

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவி தொடர்பான (பிசிசிஐ) விதிமுறைகள் என்.சீனிவாசனுக்காக மாற்றப்படவில்லை, அருண் ஜேட்லிக்காகவே மாற்றப்பட்டது என்று பிசிசிஐ முன்னாள் தலைவர் சஷாங் மனோகர் கூறியுள்ளார்.
அருண் ஜேட்லி இப்போது மத்திய நிதி, பாதுகாப்புத் துறை அமைச்சராக உள்ளார். கடந்த ஆண்டு வரை டெல்லி பிராந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், பிசிசிஐ துணைத் தலைவராகவும் இருந்தார். என்.சீனிவாசன் இப்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக உள்ளார்.
2012-ம் ஆண்டு பிசிசிஐ விதி முறையில் மாற்றம் கொண்டு வரப் பட்டது. அப்போது வெவ்வேறு பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் தான் பிசிசிஐ தலைவராக வேண் டும் என்று விதிமாற்றப்பட்டது.
இது தொடர்பாக சஷாங் மனோகர் டெல்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியிருப்பது:
டெல்லி பிராந்திய கிரிக்கெட் சங்க தலைவராகவும், பிசிசிஐ துணைத் தலைவராகவும் இருந்து அருண் ஜேட்லி, 2014-ம் ஆண்டில் பிசிசிஐ தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் அப்போது விதிமுறையில் மாற்றம் கொண்டு வர பிசிசிஐ உறுப்பினர்கள் முடிவெடுத்தனர். அருண் ஜேட்லி பிசிசிஐ தலைவராக வேண்டும் என்று இப்போதும் கூட விரும்புகிறேன். நான் மீண்டும் பிசிசிஐ தலைவராக வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. அப்பொறுப்புக்கு தகுதியான நபர் பலர் பிசிசிஐ-யில் உள்ளார்கள் என்றார்.