

நான் பங்கெடுத்தவரையில், மிகச்சிறந்த அணியாக இப்போதுள்ள இந்திய அணியைத் தான் நான் பார்க்கிறேன் என்று சட்டேஸ்வர் புஜாரா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. இந்தத் தொடரில் 3 சதங்கள் உட்பட 521 ரன்கள் குவித்துத் தொடர் நாயகன் விருதையும், சிட்னி டெஸ்டில் சதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் புஜாரா பெற்றார். இவரின் சராசரி இந்த டெஸ்ட் தொடரில் 74 ரன்களாக இருக்கிறது.
வெற்றிக்குப் பின் புஜாரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கோப்பையை வென்றதை மிகப்பெரிதாக நினைக்கிறோம். அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது. வெளிநாட்டில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதற்காக மிகவும் கடினமாக உழைத்தோம், பயிற்சியில் ஈடுபட்டோம். அதிலும் ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் அல்ல. நான் அணியில் பங்கெடுத்தவரை, எனக்குத் தெரிந்து மிகச்சிறந்த இந்திய அணியாக இப்போதுள்ள அணியைப் பார்க்கிறேன். அணியில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்தத் தொடர் வெற்றிக்கு பேட்ஸ்மேன்கள் பங்களிப்பு இருந்ததைக் காட்டிலும் பந்துவீச்சாளர்கள் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. 4 பந்துவீச்சாளர்களை வைத்துக் கொண்டு 20 விக்கெட்டுகளை வீழ்த்துவது கடினம். ஆதலால், வேகப்பந்துவீச்சாளர்கள், சுழற்பந்துவீச்சாளர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.
என்னுடைய கடமையை செய்திருக்கிறேனே தவிரப் பெரிதாக அணிக்கு ஏதும் செய்யவில்லை. ஒருபேட்ஸ்மேனாக, சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறேன். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் விளையாடிய அனுபவம் எனக்குத் துணை புரிந்து, என்னைச் சிறப்பாக தயார் படுத்த உதவியது. அடிலெய்ட் மைதானத்தில் நான் அடித்த சதத்தை என்னால் மறக்க முடியாது.
இனி இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட நீண்டநாட்கள் ஆகும். ஆதலால், நான் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், கவுண்டி கிரிக்கெட்டிலும் விளையாட இருக்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட் என்னுடைய முன்னுரிமையாக இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் விளையாட ஆர்வம் செலுத்துவேன்.
இவ்வாறு புஜாரா தெரிவித்தார்.