Published : 17 Jan 2019 04:08 PM
Last Updated : 17 Jan 2019 04:08 PM

அதிசயத் திறமையை வெளிப்படுத்திய டேவிட் வார்னர்: ஸ்விட்ச் ஹிட் அல்ல.. வலது கையில் பேட் செய்து கெய்ல் ஓவரில் விளாசல்

பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி 20 போட்டியில் இடது கை பேட்ஸ்மெனான டேவிட் வார்னர் தன்னிடம் உள்ள ஓர் அரிய திறமையை வெளிப்படுத்தி அசத்தினார், எதிரணியினரும் ஆச்சரியமடையும் வகையில் அவர் காட்டிய இந்தத் திறமை கிரிக்கெட் வட்டாரத்தில் பேச்சாக இருந்து வருகிறது.

 

சில்ஹெட் சிக்சர்ஸ் அணிக்கும் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்கும் புதனன்று நடைபெற்ற டி20 ஆட்டத்தில் இன்னிங்சின் 19வது ஓவரின் பாதியில் அவர் திடீரென வலது கை பேட்ஸ்மெனாக மாறி கார்டு எடுத்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதை விட வலது கையில் எந்த வித தடுமாற்றமும் இல்லாமல் எடுத்த எடுப்பில் ஷாட்களை ஆடியது இவர் ஒருகாலத்தில் உண்மையில் வலது கை வீரராக இருந்திருப்பாரோ என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியது.

சில்ஹெட் அணியின் கேப்டனான வார்னர் 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த போது,  கெய்ல் வீசிய இன்னிங்சின் 19வது ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார், அதன் பிறகு அடுத்த 2 பந்துகளை அவரால் அடிக்க முடியவில்லை. கெய்ல் ரவுண்ட் த விக்கெட்டில் வீச அடுத்த பந்துக்கு வார்னர் வலது கை பேட்ஸ்மெனாக நடுவரிடம் கார்ட் எடுத்தார். கெய்ல் வீச நேராக அத்தனை துல்லியமாக அவர் தூக்கி அடிக்க பந்து சிக்சராக அரைசதத்தையும் பூர்த்தி செய்தார் வார்னர்.

 

கெய்ல் உடனே ஒவர் த விக்கெட்டில் வீசினார். இம்முறை வலது கையிலேயே ஒரு ஸ்வீப் ஷாட் பவுண்டரி அடித்தார் வார்னர். 6வது பந்து மிகவும் விசித்திரமாக வலது கையில் நின்ற படியே பந்து வந்தவுடன் வலது கை வீரர்கள் ஆடும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டில் பவுண்டரி அடித்து வலது கையில் 14 ரன்களை எடுத்தார் வார்னர்.

 

36 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார் வார்னர்.

 

இது குறித்து வார்னர் கூறும்போது, “மனதில் இருந்தது, வலது கையில் ஆடுவோம் என்று தோன்றியது. கிறிஸ் கெயில் உயரத்தினால் அவரது லெந்த்தை சரிவர ஆட முடியவில்லை.  நான் கால்ஃப் ஆட்டத்தை வலது கையில் தான் ஆடுவேன். இங்கு அதனைப் பயன்படுத்தினேன் மட்டையை சுழற்றி சிக்சர் அடித்தேன்.” என்றார்.

 

ஆம். உண்மையில் சிறுபிராயத்தில் அவர் வலது கையில்தான் ஆடியிருக்கிறார்.  ஏற்கெனவே வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2010-ல் அவர் வலது கையில் ஆட முயன்ற போது நடுவர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர், ஆனால் இம்முறை அனுமதி மறுக்க முடியாத நிலையில் வார்னர் அபாரமாக தன் திறமையைப் பயன்படுத்தியுள்ளார்.

 

இவரது இந்த ஆட்டத்தின் காணொலி சமூக வலைத்தளங்களில் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு விஷயமாகியுள்ளது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x