மழையால் பாதிக்கும்; வெயிலால் நிறுத்தப்பட்டது இந்தியா,நியூசி ஆட்டம்

மழையால் பாதிக்கும்; வெயிலால் நிறுத்தப்பட்டது இந்தியா,நியூசி ஆட்டம்
Updated on
1 min read

வானிலை மோசமாக இருந்தால், மழையால் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்படுவதைக் கேள்விப்பட்டு இருக்கிறோம், வானிலை நன்றாக இருந்தாலும் ஆட்டம் நிறுத்தப்படுகிறது.

வெயில் காரணமாக இந்தியா, நியூசிலாந்து இடையிலான ஆட்டம் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

நேப்பியர் நகரில் இந்தியா, நியூசிலாந்துஇடையிலான முதலாவது ஒரநாள் போட்டி நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 158 ரன்கள் வெற்றியை விரட்டி இந்திய அணி பேட் செய்து வருகிறது.

10-வது ஓவரில் ரோஹித் சர்மா 11 ரன்களில் பிரேஸ்வெல் பந்துவீச்சில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து கேப்டன் கோலி களமிறங்கி, ஷிகர் தவனுடன் சேர்ந்தார்.

இந்நிலையில், அந்நாட்டுநேரப்படி இரவு 7.20 மணி ஆகியபோது, சூரியன் மறையும்நேர்த்தில் பேட்ஸ்மேன் முகத்துக்கு நேராகப்பட்டது. இதனால், பேட்ஸ்மேன் பந்தை பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், கோலியும், ஷிகர் தவணும் தொடர்ந்து பேட் செய்ய சிரமப்பட்டனர்.

இதையடுத்து போட்டியை சிறிதுநேரம் நிறுத்திவிட்டு, இரவு உணவையும் முடிக்க நடுவர்கள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து நடுவர் ஷான் ஜார்ஜ் கூறுகையில், “ பேட்ஸ்மேன்களுக்கு பேட் செய்வதற்கு இடையூறாகச் சூரிய ஒளி இருக்கிறது எனக் கருதுகிறோம். பேட்ஸ்மேன்கள் புகார் கூறாவிட்டாலும், வீரர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளது. ஆதலால், ஆட்டத்தை சிறிதுநேரம் நிறுத்திவி்ட்டோம்.”எனத் தெரிவித்தார்.

வழக்கமாக கிரிக்கெட் மைதானங்களில் ஆடுகளங்கள் அனைத்தும் வடக்கு தெற்காகவே அமைக்கப்படும். கிழக்கு மேற்காக இருக்காது. ஆனால், நேப்பியரில் உள்ள மெல்லீன் பார்க் மைதானத்தில் ஆடுகளம் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இதனால் பேட்ஸ்மேன்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

ஏறக்குறைய 30 நிமிடங்கள் தடங்களுக்குப் பின் மீண்டும் ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. வெற்றி இலக்குகள் ஏதும் மாற்றப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in