ஐ லீக் கால்பந்து தொடரில்: சென்னை சிட்டி அணியை வீழ்த்தியது ரியல் காஷ்மீர்

ஐ லீக் கால்பந்து தொடரில்: சென்னை சிட்டி அணியை வீழ்த்தியது ரியல் காஷ்மீர்
Updated on
1 min read

ஐ லீக் கால்பந்து தொடரில் சென்னை சிட்டி அணியை 2-வது முறையாக ரியல் காஷ்மீர் அணி வீழ்த்தியது.

ஒரு டிகிரி செல்சியஸ் காலநிலையில் கடும் பனிப்பொழிவுக்கு இடையே நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ரியல் காஷ்மீர் அணி ஆதிக்கம் செலுத்தியது. 35-வது நிமிடத்தில் ரியல் காஷ்மீர் அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஐவரிகோஸ்டைச் சேர்ந்த கிரிஸோ, சென்னை சிட்டி அணியின் பாதுகாப்பு அரண்களை உடைத்து பந்தை கடத்தி வந்த நிலையில் அவரது கோல் அடிக்கும் முயற்சியை கோல்கீப்பர் சந்தனா கார்சியா அற்புதமாக தடுத்தார்.

முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 2-வது பாதியிலும் ரியல் காஷ்மீரின் ஆதிக்கமே தொடர்ந்தது. எனினும் அந்த அணி இருமுறை கோல் அடிக்கும் வாய்ப்புகளை தவறவிட்டது. 47-வது நிமிடத்தில் ஜாம்பியாவை சேர்ந்த ஆரோன் காட்பி தலையால் முட்டிய பந்து கோல்கம்பத்துக்கு மேலாகச் சென்று ஏமாற்றம் அளித்தது.

72-வது நிமிடத்தில் மேசன் ராபர்ட்சன் கோல் அடிக்க ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை கிரிஸோ பயன்படுத்திக்கொள்ளத் தவறினார். இலக்கை நோக்கி கிரிஸோ அடித்த பந்தை கோல்கீப்பர் சந் தனா கார்சியா தடுத்தார். 9 நிமிடங்கள் எஞ்சி இருந்த நிலையில் வலதுபுறத்தில் இருந்து டேனிஸ் பரூக் அடித்த பந்தை கிரிஸோ தலையால் முட்டி கோல் வலைக்குள் திணிக்க ரியல் காஷ்மீர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

அடுத்த 4-வது நிமிடத்தில் ரியல் காஷ்மீர் அணிக்கு மேலும் ஒரு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பாஸி அர்மான்ட் பந்தை கோல்கம்பத்துக்கு மேலே அடித்து விரயம் செய்தார். கடைசி வரை போராடியும் சென்னை சிட்டி அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. முடிவில் ரியல் காஷ்மீர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் 2-வது முறையாக சென்னை சிட்டி அணியை, ரியல் காஷ்மீர் அணி வென்றுள்ளது. கடந்த மாதம் கோவையில் நடைபெற்ற ஆட்டத்திலும் காஷ்மீர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி அணியை வீழ்த்தியிருந்தது. ரியல் காஷ்மீர் அணிக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது. இதுவரை 14 ஆட்டங்களில் விளையாடி உள்ள ரியல் காஷ்மீர் அணி 4 டிரா, 2 தோல்விகளுடன் 28 புள்ளிகளை பெற்று சர்ச்சில் பிரதர்ஸ் அணியுடன் 2-வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.

அதேவேளையில் 2 தோல்வியை பெற்றுள்ள சென்னை சிட்டி அணி 30 புள்ளிகளுடன் முதலிடத் தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. முதல் 3 இடங்களில் உள்ள இந்த அணிகளுக்கு இன்னும் 6 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதனால் சாம்பியன் பட்டம் வெல்வதில் கடும் போட்டி நிலவக்கூடும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in