Last Updated : 26 Jan, 2019 12:21 PM

 

Published : 26 Jan 2019 12:21 PM
Last Updated : 26 Jan 2019 12:21 PM

ரோஹித், தவண் அசத்தல்; நியூசி.க்கு 325 ரன்கள் இலக்கு: அசார் சாதனையை சமன் செய்த தோனி

ரோஹித் சர்மா, தவண் அமைத்துக் கொடுத்த அருமையான தொடக்கத்தால் மவுண்ட் மவுங்கனுயில் நடந்துவரும் 2-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 325 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 324 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா, தவண் அமைத்துக் கொடுத்த அற்புதமான அடித்தளத்தை நடுவரிசையில் களமிறங்கிய வீரர்கள் இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தி இருந்தால், இன்னும் கூடுதலாக 40 ரன்கள் கிடைத்திருக்கும். ஆனால், கோலி, தோனி, ராயுடுவின் திடீர் மந்தமான ஆட்டம் ரன் வேகத்தைக் கடிவாளம் போட்டு சிறிதுநேரம் இழுத்துப் பிடித்துவிட்டது. ஆனால் சூழலை உணர்ந்துதான் தோனியே கடைசிநேரத்தில் அடித்து ஆடத் தொடங்கினார்.

குறிப்பாக ராயுடுவுடன், தோனியும் சேர்ந்து விளையாடத் தொடங்கிய தருணத்தில் ஏறக்குறைய 4 ஓவர்களுக்கு எந்தவிதான பவுண்டரியும் இருவரும் அடிக்காததால், ரன்ரேட் திடீரென சரிந்தது. ராயுடுவின் அதிரடிக்கு தோனி இடையூறாக இருந்தாரா அல்லது தோனியின் காட்டடிக்கு ராயுடு ஒத்துழைக்கவில்லையா எனத் தெரியவில்லை. ஆனால், கேதார் ஜாதவ் களமிறங்கிய பின்புதான் ஆட்டத்தில் அனல் பறந்து ரன் ரேட் வேகமெடுத்தது.

ஆனால், 25 ஓவர்களில் 150 ரன்கள் 40-வது ஓவரில் 238 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இருந்தபோது, நிச்சயம், ஸ்கோர் 350 ரன்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 10 ஓவர்களில் 86 ரன்கள் சேர்த்துள்ளனர். அதிலும் கடைசி 4 ஓவர்களில்தான் அதிரடி ஆட்டமே களைகட்டியது.

இன்னும் கூடுதலாக 25 ரன்கள் சேர்த்திருந்தால், சிறிய மைதானத்தில் நம்பிக்கையுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளலாம்.

அசார் சாதனை சமன்

தோனிக்கு இது 334-வது ஒருநாள் போட்டியாகும். கணக்கின்படி 337 ஒருநாள் போட்டி  என்றபோதிலும் ஆசியலெவன் அணிக்காக 3 போட்டிகளை தோனி விளையாடியுள்ளார். இதையடுத்து, முன்னாள் கேப்டன் அசாரூதீனின் 334 போட்டிகளை தோனி இந்தப் போட்டியோடு சமன் செய்தார்.

சச்சின் 463 ஒரு நாள் போட்டிகளிலும், திராவிட் 340 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். திராவிட் சாதனையை முறியடிக்க தோனிக்கு இன்னும் 6 போட்டிகளே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற நம்பிக்கையுடன் இன்று பகலிரவாக 2-வது ஆட்டம் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மா, தவண் ஆட்டத்தைத் தொடங்கினார். டிரண்ட் போல்ட் வீசிய முதல் ஓவர், முதல் பந்திலேயே ரோஹித் ஆட்டமிழக்க வேண்டியது. ஆனால், ஸ்லிப் பீல்டர் சிறிது தள்ளி நிறுத்தப்பட்டதால், பந்து பவுண்டரிக்குச் சென்றது.

தொடக்க வீரர்கள் ரோஹித், தவண் கூட்டணி நிதானமாகத் தொடங்கி பின்னர் அதிரடிக்கு மாறினார்கள். நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை அடித்து சிதறடித்தனர். இதனால், ஓவருக்கு 6 ரன்ரேட் வீதம் சென்றது. ஓவருக்கு குறைந்தபட்சம் ஒரு பவுண்டரி அடித்து ரன் ரேட் கீழே சரியாமல் கொண்டு சென்றனர்.

9 ஓவர்களில் 50 ரன்களையும், 17 ஓவர்களில் 100 ரன்களையும் எட்டியது. ரோஹித் சர்மா 62 பந்துகளிலும், தவண் 53 பந்துகளிலும் அரை சதத்தை எட்டினார். இருவரின் தொடக்க கூட்டணி 14-வது முறையாக 100 ரன்களைத் தாண்டியது. அரை சதம் கடந்த பின் இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு சிக்ஸர்களுக்கும் பவுண்டரிகளுக்கும் பறக்க விட்டனர். இதனால், தொடக்கக் கூட்டணியே 200 ரன்களை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

டிரண்ட் போல்ட் வீசிய 26-வது ஓவரில் ஷிகர் தவண் 66 ரன்கள் சேர்த்த நிலையில், லாதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தவண் கணக்கில் 9 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 154 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து வந்த கோலி, ரோஹித்துடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்துவந்தனர். சதத்தை நோக்கி ரோஹித் முன்னேறிய நிலையில், பெர்குஷன் பந்துவீச்சில் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் கணக்கில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கும்.

3-வது விக்கெட்டுக்கு கோலி, ராயுடு இருவரும் விக்கெட் சரியாமல் நிதானத்தை கடைபிடித்தனர். கோலியின் ஆட்டத்தில் ஆக்ரோஷம் காணப்பட்டால், நிதானம் தென்பட்டதால், மோசமான பந்துகளை மட்டும் தேர்வு செய்து பவுண்டரிகள் அடித்தார். இருவரின் நிதானமான ஆட்டத்தால், ரன்வேகம் திடீரென சரிந்தது.

40 ஓவரை போல்ட் வீசினார். 43 ரன்கள் சேர்த்த நிலையில் சோதியிடம் கேட்ச் கொடுத்து கோலி வெளியேறினார். இவர் கணக்கில் 5 பவுண்டரிகள். இருவரும் 64ரன்கள் சேர்த்தனர். அடுத்துக் களமிறங்கிய தோனி, ராயுடுவுடன் சேர்ந்தார்.

இருவரின் திடீர் மந்த ஆட்டத்தால், ஸ்கோர் மெல்லவே உயர்ந்தது. இருவரும் ஒரு ரன், இரு ரன்கள் சேர்ப்பதிலேயே ஆர்வம் காட்டினர். 40 ஓவர்களுக்கு மேல் அடித்து ஆட வேண்டிய நிலையில் மந்தமாக பேட் செய்தது ரன் வேகத்தை மட்டுப்படுத்தும். ராயுடு 47 ரன்களில் பெர்குஷன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

5-வது விக்கெட்டுக்கு கேதாவ், தோனியுடன் இணைந்தார். யாதவ் களமிறங்கியபின் ஆட்டத்தில் வேகம் எடுத்தது. தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜாதவ் காட்டடி அடித்தார். ஸ்கோர் 300 ரன்களை 49 ஓவர்களில் கடந்தது. கடைசி ஓவரில் ஜாதவ் இரு பவுண்டரிஸ ஒருசிக்ஸர் அடிக்க, தோனி பவுண்டரி அடித்தார்.

50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 324 ரன்கள் சேர்த்தது. தோனி 33 பந்துகளில் 48 ரன்களுடனும், ஜாதவ் 10 பந்துகளில் 22 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் பெர்குஷன், போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x