

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டியில் வென்று தனது மூன்றாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.
டை பிரேக் வரை சென்ற இந்த போட்டியில், 6—1 2—6 11—9 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமெரிக்காவின் அபிகெயில் ஸ்பியர்ஸ் மற்றும் மெக்சிகோவின் சாண்டியாகோ கொன்ஸாலஸ் ஜோடியை, பிரேசிலின் புருனோ சோர்ஸ், இந்தியாவின் சானியா ஜோடி வீழ்த்தியது.
சோர்ஸ் மற்றும் சானியா கலப்பு இரட்டையர் பிரிவில் இணைந்திருப்பது இதுவே முதல்முறை. சோர்ஸ் உடன் ஆடியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ள சானியா, ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியிலும் இந்த ஜோடி தொடரும் என உறுதி செய்தார்.
இதற்கு முன், இந்தியாவின் மகேஷ் பூபதியுடன் கலப்பு இரட்டையர் பிரிவில் ஆடியுள்ள சானியா, 2009-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியிலும், 2012-ஆம் ஆண்டு பிரென்ச் ஓபன் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.