Last Updated : 26 Jan, 2019 04:30 PM

 

Published : 26 Jan 2019 04:30 PM
Last Updated : 26 Jan 2019 04:30 PM

30 ஓவர்களுக்கு மேல் வேகமாக ரன் சேர்க்கத் தவறிவிட்டோம்: கோலி வெளிப்படை

30 ஓவர்களுக்கு மேல் நாங்கள் ரன் சேர்க்கும் விதத்தில் மந்தமாகிவிட்டது.  உலகக் கோப்பையை எதிர்நோக்கி வரும் நிலையில், நடுப்பகுதியில் நாங்கள் இன்னும் அதிகமான ரன்களைச் சேர்க்க வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒப்புக்கொண்டார்.

இன்றைய நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, தவண் கூட்டணி சிறப்பாக ஆடி வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்துவந்த கோலி, ராயுடு, தோனி நடுப்பகுதி ஓவர்களில் மந்தமாக ஆடி ரன் வேகத்தை குறைத்துவிட்டனர். இதை ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்த ரசிகர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். இதை சுட்டிக்காட்டி இருந்தோம். இதையே கோலியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

நடுப்பகுதியில் ரன் வேகம் அதிகரித்து இருந்து, 40 ஓவர்களுக்கு மேல் தொடர்ந்திருந்தால், இந்திய அணியின் ஸ்கோர் 350 ரன்களுக்கு மேல் சென்றிருக்கும். ஆனால்,  கடைசி 5 ஓவர்களில் மட்டுமே தோனியும், கேதார் ஜாதவும் அதிரடியை கையாண்டானர்.  இதை 40 ஓவர்களில் இருந்தே செயல்படுத்தி இருக்க வேண்டும்.

வெற்றிக்குப் பின் கோலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''நியூசிலாந்துக்கு எதிராக மீண்டும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம்.  பேட்டிங்கில் அனைவரும் சமநிலையுடன் விளையாடி  இருக்கிறோம். 325 ரன்கள் என்பது நல்ல ரன் ரேட் என்கிற போதிலும், சவாலான ஸ்கோர் என்று கூற முடியாது. இன்றைய நியூசிலாந்து ஆட்டத்திலும் எதிர்பார்த்த அளவுக்கு மனநிறைவு இல்லை. ஆனால், அனைத்து துறைகளிலும் அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர்.

30 ஓவர்கள் முதல் 40 ஓவர்கள் வரை நாங்கள் ரன் சேர்க்கும் வேகம் குறைந்துவிட்டதை நாங்கள் ஒப்புக்கொள்கிறேன். ரன்கள் சேர்க்க கடினமாக முயற்சித்தோம். ஒருவேளை எதிர்பார்த்த அளவுக்கு ரன் சேர்த்திருந்தால், ஸ்கோர் 350 ரன்களை எட்டியிருக்கும். உலகக்கோப்பை நெருங்கிவரும் நிலையில், நடுப்பகுதியில் விளையாடும் வீரர்கள் ரன் சேர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும்.

குல்தீப், சாஹல் எப்போதும் பந்துவீசவும், விக்கெட் வீழ்த்தவும் தயாராக இருக்கிறார்கள். ரோஹித், தவண் அமைத்துக்கொடுத்த அடித்தளம் இன்றைய போட்டியின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.  எங்களுக்கு ஆடுகளம் எப்படி இருக்கப் போகிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், போட்டி தொடங்கி சிறிது நேரத்துக்குப் பின் பேட்ஸ்மேன்களுக்கு தகுந்த ஆடுகளம், நல்ல ஸ்கோர் செய்ய முடியும் என்பதை அறிந்தோம். இங்கு இலங்கை அணி விளையாடியபோது, 325 ரன்கள் வரை அடித்துள்ளனர். ரோஹித், தவண் நல்ல புரிந்துணர்வோடு விளையாடுகிறார்கள். ஒரு அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைதல் வெற்றிக்கு முக்கியமானதாகும்''.

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் கூறுகையில், "எனக்கு சிறிய அளவில் வேதனையாக இருக்கிறது. தோல்வி பெரிதாக இல்லாவிட்டாலும், தோல்வி அடைந்த விதம் எனக்கு வருத்தமாக இருக்கிறது. சேஸிங் விஷயத்தில் நாங்கள் கவனத்துடன் செயல்படவில்லை. 2 போட்டிகளை நாங்கள் இழந்துவிட்டாலும், இன்னும் 3 போட்டிகள் இருக்கின்றன. அடுத்து வரும் போட்டிகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.  இந்தப் போட்டியில் செய்த தவறுகளை கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் நிகழாமல் தடுப்போம்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x