

ஹசிம் அம்லாவின் மந்தமான ஆட்டம், சுயநலமான சதத்தால், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி.
ஹசிம் அம்லாவின் சுயநலமான சத்தால் வெற்றி பெற வேண்டிய தென் ஆப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு வெற்றியை தாரைவார்த்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்று பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியில் அம்லா சதம் அடித்து ஒருநாள் அரங்கில் 27-வது சதத்தை நிறைவு செய்தார். அம்லா தனது 27-வது சதத்தை 167-வது இன்னிங்ஸில் அடித்து மிகவேகமாக 27-வது சதத்தை அடித்த வீரர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் 27-வது சதத்தை மிகக்குறைந்த இன்னிங்ஸில் அதாவது 169 இன்னிங்ஸில் எடுத்தவர் என்ற பெருமையை கோலி பெற்றிருந்தார். அதை அம்லா முறியடித்தார்.
ஆனால், இந்த ஆட்டத்தில் ஹசிம் அம்லாவின் ஆமைவேக ஆட்டம், சுயநலத்தோடு சதம் அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். முன்னாள் வீரர் ஹெர்சல் கிப்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹசிம் அம்லாவை மறைமுகமாகச் சாடி, தென் ஆப்பிரிக்காவின் மோசமான ஸ்கோர் என்று புள்ளிவிவரத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கக் கேப்டன் டூபிளசிஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்தது.
அம்லா 120 பந்துகளில் 108 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.
ஹென்ட்ரிக்ஸ் 45 ரன்களிலும், வாண்டர் டுசேன் 101 பந்துகளில் 93 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு அம்லாவும், வாண்டர் டுசேனும் 155 ரன்கள் சேர்த்தனர்.
2-வது விக்கெட்டுக்கு இருவரும் 155 ரன்கள் சேர்த்தது பெருமையாகக் கூறப்பட்டாலும், இருவரின் மந்தமான ஆட்டம் ஸ்கோர் குறைந்ததற்கு முக்கிய காரணமாகும். சமீபகால ஒருநாள் போட்டிகளில் கடைசி 10 ஓவர்களில்தான் பேட் செய்யும் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைச் சேர்க்கும், ஆனால், முற்றிலும் மாறாக, கடைசி 15 ஓவர்களில் 100 ரன்களை மட்டுமே தென் ஆப்பிரிக்க அணி சேர்த்ததுள்ளது. 35 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் இருந்த நிலையில், அதன்பின் 100 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், ஹசன் அலி, சதாப் கான், இமாத் வாசிம் ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்துவீசி 20 ஓவர்களுக்குமேல் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்திவிட்டனர். இதனால், ஆம்லா பந்துகளை வீணாக்கி ரன் சேர்க்கும் வேகத்தை குறைத்துவிட்டார்.
ஒருநாள் போட்யில் கடந்த 1992-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பின் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து மிகக் குறைவாக அடிக்கப்பட்ட ஸ்கோர் இதுதான் என்று முன்னாள் வீரர் கிப்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடைசி 10 ஓவர்களில் விக்கெட் போனாலும் பரவாயில்லை என்ற நோக்கில் ஆம்லாவும் டுசைனும் விளையாடி இருந்தால், தென் ஆப்பிரிக்க அணி இன்னும் கூடுதலாக 50 ரன்களைப் பெற்றிருக்கும். 35 ஓவர்களுக்கு பின் ஆட்டம் போன வேகத்தைக் கணக்கிட்டபோது நிச்சயம் 300 ரன்களுக்குமேல் தென் ஆப்பிரிக்கா குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 10 ஓவர்களில் 76 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. ஹசிம் அம்லாவின் மந்தமான ஆட்டம் தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.
267 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 5 பந்துகள் மீதம் இருக்கையில் இலக்கை அடைந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் இமாமுல் ஹக் 89 ரன்கள் சேர்த்தார். பாபர் ஆசம் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். சோயிப் மாலிக் 12 ரன்னிலும் கேப்டன் சர்பிராஸ் அகமது ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
முகமது ஹபிஸ் 71 ரன்கள் சேர்த்தும், சதாப்கான் 18 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஆட்டநாயகன் விருதை முகமது ஹபிஸ் பெற்றார்.