ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட்: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி - செயிண்ட் பீட்ஸ் இறிதிப் போட்டியில் இன்று பலப்பரீட்சை

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட்: ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி - செயிண்ட் பீட்ஸ் இறிதிப் போட்டியில் இன்று பலப்பரீட்சை
Updated on
2 min read

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி - கோவை ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதுகின்றன.

முத்தூட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆதரவுடன் பள்ளிகள் இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் (ஜேஎஸ்கே) கோப்பைக்கான டி 20 கிரிக்கெட் தொடரின் 2-வது கட்ட போட்டிகள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரின் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நேற்று சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி அணி, மதுரை லீ சாட்லியர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணியை எதிர்த்து விளையாடியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. விக்னேஷ் எஸ்.ஐயர் 50 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 90 ரன்கள் விளாசினார். எஸ்.ரித்திக் ஈஸ்வரன் 34, சுபாங் மிஸ்ரா 22 ரன்கள் சேர்த்தனர்.

183 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லீ சாட்லியர் அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 89 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ஏ.ஆர்.ஆனந்த் 28, ஏ.லாரன் நிகிலன் 24 ரன்கள் சேர்த்தனர். செயின்ட் பீட்ஸ் அணி சார்பில் எஸ்.நிகிலேஷ் 3 விக்கெட்கள் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக விக்னேஷ் எஸ்.ஐயர் தேர்வானார். 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செயின்ட் பீட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளி - கோவை  ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சாந்தோம் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்தது. பி.சாய் சுதர்சன் 45 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் சேர்த்தார்.  ஜெயேந்திர சரஸ்வதி அணி சார்பில் பி.ஜோபின் ஜெரால்டு 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.

112 ரன்கள் இலக்குடன் பேட் செய்த  ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. பி.சச்சின் 47, ஆர்.ரிஷிகேஷ் திரிலோச்சன் 21 ரன்கள் சேர்த்தனர். ஆட்ட நாயகனாக பி.சச்சின் தேர்வானார்.

ஜூனியர் சூப்பர் கிங்ஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில் இன்று சென்னை செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி - கோவை ஜெயேந்திர சரஸ்வதி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 6.30 மணிக்கு சங்கர் நகரில் உள்ள ஐசிஎல் ஏ மைதானத்தில் மின்னொளியில் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in