ஹனுமா விஹாரி வீசும்போது எங்களுக்கு அஸ்வின் ஆடமுடியாமல் போய்விட்டதே என்ற உணர்வு ஏற்படுவதில்லை: விராட் கோலி கருத்து

ஹனுமா விஹாரி வீசும்போது எங்களுக்கு அஸ்வின் ஆடமுடியாமல் போய்விட்டதே என்ற உணர்வு ஏற்படுவதில்லை: விராட் கோலி கருத்து
Updated on
2 min read

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி வெற்றியில் 86 ஓவர்களை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் இடதுபக்க இடுப்பு வலி காரணமாக அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளிலிருந்து நடப்பு தொடரில் ஓரங்கட்டப்பட்டார்.

இங்கிலாந்திலும் இதே போன்ற காயத்தினால்தான் அவரால் பாதியில் விலக நேரிட்டது என்று கூறும் விராட் கோலி, 100% உடற்தகுதியுடைய அஸ்வின்தான் நம் அணிக்கு தேவை என்று கூறியுள்ளார்.  மேலும் தான் எப்படி காயங்களை 2011-ம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறேன் என்பதைக் கூறி அஸ்வின் அம்மாதிரியான ஒரு நடைமுறையைக் கையாள வேண்டும் என்று உபயோகமான ஆலோசனையையும் கோலி வழங்கியுள்ளார்.

சிட்னி டெஸ்ட் போட்டிக்கு இறுதி 13 வீரர்கள் பட்டியலில் அஸ்வின் பெயரை சேர்த்திருந்தாலும் அவர் ஆடுவாரா மாட்டாரா என்பது ஆட்டம் தொடங்கும்போதுதான் தெரிய வரும்.

இந்நிலையில் அஸ்வின் காயம் பற்றி கோலி கூறியதாவது:

இங்கிலாந்து, தற்போது ஆஸ்திரேலியா 2 ஒரேவிதமான காயம் அவர் கிரிக்கெட்டைப் பாதித்துள்ளது துரதிர்ஷ்டமே, அவர் இதனைச் சரிசெய்ய மிகுந்த கவனம் எடுத்து கொண்டு வருகிறார்.

உடற்தகுதி நிபுணர், பயிற்றுநர் இருவரும் அவரிடமிருந்து என்ன தேவை என்பதை அஸ்வினிடம் பேசியுள்ளனர்.  டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் ஒரு முக்கியமான வீரர். அவர் 100% உடற்தகுதியுடன் ஆட வேண்டும் என்றே விரும்புகிறோம்.  அப்போதுதான் அணிக்கு அவரால் நீண்ட காலம் சேவை யாற்ற முடியும்.

குறித்த சமயத்துக்கு காயத்திலிருந்து குணமடைய முடியவில்லை என்பதில் அவர் கடும் ஏமாற்றமடைந்துள்ளார்.  ஆனால் அவர் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. நேர்மையாகக் கூற வேண்டுமெனில் காயம் ஏற்படுவதி முன் கூட்டியே கணிக்க முடியாது, ஏற்பட்டவுடன் அதை எப்படி சமாளித்து அதனை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்பதே முக்கியம்.

உடல்ரீதியாக காயத்தை நிர்வகித்து காயம் ஏற்படாத ஒரு நிலையை அடைய வேண்டும். இப்போது நான் அதைத்தான் செய்து வருகிறேன்.  என் உடல் தகுதி எனக்கு மிக மிக முக்கியம்.

காயங்கள் இல்லாமலே ஆடுவது என்பது மனித சாத்தியமல்ல. சிலபல காயங்கள் ஏற்படுவது சகஜம்தான், ஆனால் அதனை ஒழுங்காக நிர்வகிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

எனக்கே 2011 முதல் டிஸ்க் பிரச்சினை உள்ளது.  அதை நான் எப்படி புறந்தள்ள முடிகிறது என்றால் என் உடற்தகுதி பயிற்சி முறைகளில் நான் கண்டிப்பானவன். அதாவது அது நம் ஆட்டத்தை பாதிக்காத அளவுக்குப் பார்த்துக் கொண்டு நிர்வகித்தால் போதுமானது.

பணிச்சுமை அதிகரிக்கும் போது அது இறுகிப்பிடிக்கும், பெரிய பிரச்சினையெல்லாம் இல்லை 2-3 நாட்களில் சரி செய்து விடலாம்.  எனவே எனக்கு காயங்கள் பற்றி பெரிய கவலையெல்லாம் ஏற்பட்டதில்லை.

கடந்த 3 ஆண்டுகளாக நான் உடல்தகுதி விஷயத்தில் உடற்பயிற்சியில் சமரசம் செய்து கொண்டதில்லை, அதுமட்டுமல்ல, டயட், தூக்க முறைகள், இவையெல்லாமும் முக்கியம்.

அஸ்வின் காயத்தினால் அணியின் திட்டத்தில் கொஞ்சம் மாற்றங்கள் செய்ய வேண்டியதானது.  ஆனால் ஒவ்வொரு முறை பந்தைக் கொடுக்கும் போதும்  ஹனுமா விஹாரி அருமையாக வீசுவதால் அவரிடம் பந்தைக் கொடுக்கும் போது அஸ்வின் விளையாட முடியாமல் போய் விட்டதே என்ற உணர்வு எங்களுக்கு ஏற்படவில்லை.

ஹனுமா விஹாரி வீசும் விதம் எப்போதும் விக்கெட் வீழ்த்துவார் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. அவர் சரியான இடத்தில் பந்தை வீசுகிறார், ஆகவே அவரைத்தான் இப்போதைக்கு திடமான பவுலிங் தெரிவாக வைத்திருக்கிறோம்.

குறிப்பாக இந்த டெஸ்ட் போட்டியில் அவர் பந்தில் வேகம் உள்ளது, சிக்கனமாக வீசுகிறார் ஒருநாளைக்கு 10-15 ஓவர்கள் வீசவரும் ஒரு பவுலருக்குத் தேவையானது அவரிடம் உள்ளது, அது போதும்.

இவ்வாறு கூறினார் கோலி. இவரது இந்தக் கூற்று சிட்னி டெஸ்ட் போட்டிக்கும் அஸ்வின் இருக்க மாட்டார் என்பதை அறிவுறுத்துவதாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in