

ஜிம்பாப்வே அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு விளையாடுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பயணத் தொடர் தள்ளிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் பயணம் செய்து விளையாடி வருகிறது. வரும் 18-ம் தேதி ஒருநாள் தொடர் முடிந்த பின் நியூசிலாந்துக்குச் செல்லும் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் பிப்ரவரி 10-ம் தேதிவரை விளையாடிவிட்டு நாடு திரும்புகிறது.
அதன்பின் பிப்ரவரி மாதம் பிற்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி பெங்களூருவில் முதல் டி20 போட்டியும், 27-ம் தேதி விசாகப்பட்டினத்தில் 2-வது டி20 போட்டியும் நடக்கிறது.
அதன்பின் ஹைதராபாத்(மார்ச் 2), நாக்பூர் (மார்ச் 5), ராஞ்சி(மார்ச் 8), மொகாலி(மார்ச் 10) டெல்லி (மார்ச் 13) ஆகிய தேதிகளில் 5 ஒருநாள் போட்டிகள் பகலிரவு ஆட்டங்களாக நடக்கின்றன. அடுத்த 10 நாட்கள் இடைவெளியில் மார்ச் 23-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டித்தொடர் தொடங்கிவிடுகிறது.
இந்த இடைப்பட்ட நாளில் ஜிம்பாப்வே அணி பயணத்திட்டம் இருந்தது. ஆனால், ஐபிஎல் போட்டியை முன்கூட்டியை நடத்தத் திட்டமிட்டு இருப்பதால், ஜிம்பாப்வே அணி பயணம் செய்து விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதலால், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் மேலாண் இயக்குநர் கிவ்மோர் மகோனி, விரைவில் பிசிசிஐ அதிகாரிகளிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
ஜிம்பாப்வே இந்திய அணிகளுக்குஇடையிலான டி20 மற்றும் ஒருநாள் தொடர் தள்ளிப்போகலாம் அல்லது உலகக்கோப்பைக்குப் பின் நடத்தப்படலாம் என்று கிரிக் இன்போ தளம் தெரிவித்துள்ளது.