

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது என்னுடைய மிகப்பெரிய சாதனை, இப்போதுள்ள அணிக்கு வித்தியாசமான தோற்றத்தை அளித்திருக்கிறது, எங்களுடைய மாற்றமும் இங்கிருந்து தொடங்குகிறது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவுடனான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது. ஆசியக் கண்டத்திலேயே முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதும் இந்திய அணிதான்.
இந்த மிகப்பெரிய சாதனை குறித்து கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆஸ்திரேலிய மண்ணில் 72 ஆண்டுகளுக்குப் பின் டெஸ்ட் தொடரை வென்று என்னுடைய மிகப்பெரியசாதனை. இந்திய அணிக்குச் சர்வதேச அளவில் வித்தியாசன தோற்றத்தை இந்த வெற்றி அளித்திருக்கிறது. எங்களுடைய மாற்றம் இங்கிருந்து தொடங்குகிறது.
நான் கேப்டனாக பொறுப்பேற்றபோது, 4 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய மண்ணில் இப்படி ஒரு தொடரை வெல்வேன் என்று நம்முடியவில்லை.
ஒரே வார்த்தை மட்டும் சொல்கிறேன். இந்த அணியை நான் வழிநடத்திச் செல்வதில் நான் பெருமைப்படுகிறேன், எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம், சிறப்புரிமையாகக் கருதுகிறேன். என்னை மிகச்சிறந்த கேப்டனாக அணி வீரர்கள் மாற்றி இருக்கிறார்கள்.
2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது, நான் அணியில் மிகவும் இளையவன். ஒவ்வொரு வீரர்களும் கோப்பையை வென்றபோது, உணர்ச்சிவசப்பட்டதைப் பார்த்திருக்கிறேன், ஆனால், அதை நான் அப்போது உணரவில்லை, ஆனால், இங்கு 3 முறை வந்து தோல்வியுடன் சென்று இப்போது கோப்பையுடன் செல்வது பெருமையாக இருக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றி எங்களுக்கு வித்தியாசமான அடையாளத்தை அளித்திருக்கிறது. எங்களால் சாதிக்க முடியும் என்பதை வெளிக்காட்டி இருக்கிறது, பெருமைப்பட வைத்துள்ளது.
எங்களுடைய பேட்ஸ்மேன்களை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். குறிப்பாக புஜாரா, இந்த தொடரில் மிகச்சிறப்பாக விளையாடினார். கடந்த முறை வந்ததைக் காட்டிலும் இந்த முறை அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக்கொண்டு, விளையாடினார். அவரை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.
2-வதாக பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியின்போது மயங்க் அக்ரவால் பேட் செய்தவிதம் சாம்பியன்போல் இருந்தது. அவரின் மனவலிமை பேசப்பட வேண்டியது. ரிஷப் பந்த் கடைசி டெஸ்டில் தனக்கே உரிய தாக்குதல் ஆட்டத்தைக் கையாண்டு அசத்தினார். ஒட்டுமொத்தமாக அனைத்து பேட்ஸ்மேன்களும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
பந்துவீச்சாளர்கள் பணி அளப்பரியது. கடந்த தொடரைப் போல் அல்லாமல் பந்துவீச்சாளர்கள் ஒருவொருக்கு ஒருவர் பேசிக்கொண்டு,ஆலோசித்துப் பந்துவீசினார்கள். இதுபோல் வேறு எந்த முறையும் நடந்திருக்காது. அதிலும் எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்கள் இங்கு வந்து சாதித்துவிட்டார்கள், மேற்கிந்தியத்தீவுகள் அணி வீரர்கள் சாதனையையும் முறியடித்துவிட்டார்கள்.
உண்மையில் இந்த வெற்றி எங்களுக்கு ஒருமைல்கல்தான். அணியில் உள்ள வீரர்களின் சராசரி வயது மிகக்குறைவு. எங்களுடைய முக்கியமான பலமே நம்பிக்கைதான், எங்களுடைய நோக்கம் நல்லவிதமாக இருந்தது, இந்திய அணியை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தோம்.
தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும் நாங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியபோதிலும் தொடரை வெல்ல முடியவில்லை. சரியான திசையில் நாம் பணியாற்றும்போது, நம்முடைய நேர்மையைக் கடவுள் அறிந்து வழிகாட்டுவார்.
இந்த வெற்றியை மிகச்சிறப்பாக கொண்டாடப் போகிறோம். இனிமேல் சிறிது காலத்துக்கு டெஸ்ட் போட்டிகள் இல்லை, அதிகாலையில் எழுந்திருக்க வேண்டி அலாரம் வைக்கத் தேவையில்லை. இங்குள்ள ரசிகர்கள் எங்களுக்கு அதிகமான ஆதரவு அளித்தார்கள். வெளிநாட்டில் விளையாடுகிறோம் என்ற உணர்வில்லாமல் இருந்தோம்.
இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்