Published : 07 Jan 2019 04:37 PM
Last Updated : 07 Jan 2019 04:37 PM

எங்கள் கணக்கை பொய்யாக்கியது இந்திய அணி; வார்னர், ஸ்மித் இல்லாததை உணர்கிறோம்: பெய்ன் குமுறல்

டெஸ்ட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி விடுவோம் என்று கணித்தோம். ஆனால் நேர்மையாகவே எங்கள் கணிப்பை  இந்திய அணியினர் பொய்யாக்கி விட்டனர். வார்னர், ஸ்மித் இல்லாத வெறுமையை உணர்கிறோம் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் வேதனை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றுள்ளது இந்திய அணி.

அதேசமயம் ஆஸ்திரேலிய அணி 30 ஆண்டுகளில் முதல் முறையாக உள்நாட்டில் பாலோ ஆன் பெற்றது.  2005க்குப் பின் டெஸ்ட் போட்டியில் பாலோ ஆன் இந்திய அணியிடம் பெற்றது என பல்வேறு மறக்க முடியாத கசப்பான நினைவுகளை இந்தத் தொடரில் பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களிடம் கூறியதாவது:

''இந்திய வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டார்கள். அதிலும் குறிப்பாக இந்தியாவின் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் எங்கள் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இந்த 3 வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக எங்கள் பேட்ஸ்மேன்கள் தயாராக கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. குறிப்பாக ஹாரிஸ், ஹெட் ஆகியோர் இந்தியாவின் வேகப்பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அடிலெய்ட் டெஸ்ட்டில் வெற்றி எங்கள் பக்கம்தான் இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் முக்கியமான தருணங்களில் இந்தியாவின் சிறப்பான பந்துவீச்சால் அனைத்தும் கைவிட்டுப்போனது. சிறப்பாக விளையாடினார்கள் என்பதை நேர்மையாக ஒப்புக்கொள்கிறேன்.

இந்த டெஸ்ட் தொடரை நாங்கள் இழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அதேநேரத்தில் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்மித், வார்னர் இல்லாத நிலையை நாங்கள் உணர்கிறோம். இந்தத் தொடர் தொடங்கும் முன் இந்திய அணியைத் தோற்கடித்துவிடுவோம் என்று கணித்தோம். ஆனால், இந்தத் தொடரில் விராட் கோலி அடித்த ரன்கள், புஜாராவின் சதம், பும்ராவின் வேகப்பந்துவீச்சு அனைத்தும் கணிப்பைப் பொய்யாக்கியது. அதனால்தான் இந்திய அணி வெற்றி பெற்றது.

எங்கள் அணியில் ஒரு வீரர் கூட சதம் அடிக்கவில்லை என்பது வருத்தம்தான். ஒருசில வீரர்களைக் குறைசொல்வதைக் காட்டிலும், டாப் ஏழு பேட்ஸ்மேன்களும் சரியாக விளையாடவில்லை என்றே கூற முடியும். அதேநேரத்தில் பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாகச் செயல்பட்டது ஆறுதல் அளிக்கிறது. அடுத்துவரும் இலங்கை தொடருக்கு ஊக்கமாக அமையும்''.

இவ்வாறு பெய்ன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x