

இன்று சிட்னியில் நடந்த ஒரு நாள் போட்டியில் ரிச்சர்ட்சனின் சிறப்பான பந்து வீச்சினால் இந்தியாவை ஆஸ்திரேலியா தோற்கடித்தாலும் பேட்டிங்கில் ஒருகட்டத்தில் 7 ஓவர்களுக்கும் மேல் பவுண்டரிகளே வராமல் இருந்தது, அப்போது மேக்ஸ்வெலை இறக்காமல் ஸ்டாய்னிஸை இறக்கியது பற்றி கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஷான் மார்ஷ் அவுட் ஆகும்போது ஆஸி. 186/4 என்று இருந்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்கம்புக்கு ஜோடியாக அப்போது மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்குகிறார். ஆனால் இங்குதான் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை களமிறக்கியிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வர்ணனையில் கடுமையாகச் சாடினர்.
மேக்ஸ்வெல் ஹேண்ட்ஸ் கம்ப் ஆட்டமிழந்த போது 48வது ஓவரில் இறங்கி 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 11 ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார்.
இந்நிலையில் ஃபாக்ஸ் கிரிக்கெட்டில் ஷேன் வார்ன் கூறியதாவது: மேக்ஸ்வெல் 5 பந்துகளுக்கு மேல் ஆடியிருக்க வேண்டும், அவர் என்ன 5 பந்து வீரரா? அவர் எவ்வளவு அபாயகரமான வீரர்? அவரிடம் புதுமையான ஷாட்கள் பல உள்ளன. இன்று அவர் ஆட முடியாமலேயே கூட போயிருக்கலாம்.” என்றார்
மார்க் வாஹ் கூறும்போது, “அவர் பேட்டிங் நிலை என்ன என்று தெரியவில்லை. கிளென் மேக்ஸ்வெல் இன்னும் முன்னரே களமிறக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்றார் ஆலன் பார்டரும் அதிருப்தி தெரிவித்தார்.
அதே போல் 7 ஓவர்களுக்கும் மேல் பவுண்டரியே வராமல் இருந்த போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் ஏன் அடிக்க முயற்சி கூட எடுக்கவில்லை, இடைவெளியில் அடித்து ஒன்று ,இரண்டு என்று எடுத்துக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி கண்டனர் என்று மார்க் வாஹ், ஷேன் வார்ன் இருவருமே தெரிவித்தனர்.