Published : 16 Jan 2019 02:33 PM
Last Updated : 16 Jan 2019 02:33 PM

அடுத்த முறை நிச்சயம் தோனி எனக்குப் பதிலாக எதிர்முனையில் இன்னொரு அதிரடி வீரரைத்தான் விரும்புவார்: தினேஷ் கார்த்திக் ருசிகரம்

அடிலெய்ட் வெற்றியின் போது தினேஷ் கார்த்திக்கும் தோனியும் சிறப்பாக பினிஷ் செய்து வெற்றி தேடித் தந்தனர், இந்நிலையில் தோனி களைப்புப் பற்றியும் அவருடன் ஆடிய அனுபவம் பற்றியும் தினேஷ் கார்த்திக் மனம் திறந்துள்ளார்.

 

கேதார் ஜாதவ்தான் அணியில் இருக்க வேண்டும், ஏனெனில் அவர் பவுலிங்கும் செய்வார், தினேஷ் கார்த்திக் ஏன் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில் அடிலெய்டில் நேற்று 14 பந்துகளில் 25 ரன்கள் என்று கிட்டத்தட்ட 200% ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார் தினேஷ் கார்த்திக் , இந்நிலையில் அவர் கூறியதாவது:

 

“தோனி இப்படிப்பட்ட இன்னிங்ஸ்களை மீண்டும் மீண்டும் ஆடிவருகிறார். ஆகவே அவர் ஆடுவதைப் பார்ப்பதும் போட்டியை விமரிசையாக முடித்துக் கொடுப்பதும் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  சூழலின் அழுத்தத்தை தனக்குள் உறிஞ்சி பிறகு எதிரணி மீது திருப்பி விடுகிறார். அதுதான் அவரது கிரேட்னெஸ். இந்த ஒருநாள் போட்டி அதற்கு இன்னொரு உதாரணம்.

 

கடும் உஷ்ணம் காரணமாக அனைவருக்குமே நீர் தேவைப்படுகிறது, தோனிக்கு நிறைய சதைப்பிடிப்புகள் ஏற்பட்டன.  அவர் நீண்ட நேரம் பேட் செய்தது இன்னும் தசைப்பிடிப்புக்குக் காரணமானது. அதுவும் நான் ஆடிக்கொண்டிருக்கும் போது, நான் நிறைய ஒன்று, இரண்டு என்று ரன்களை ஓடி எடுப்பவன், அவரையும் 3வது ரன்னுக்கு நான் தள்ளிக் கொண்டிருந்தேன். அதனால் சதைப்பிடிப்பின் போது என் கூட ஓடுவதும் கடினமாக அமைந்திருக்கும்.

 

அடுத்த முறை நாங்கள் இருவரும் பேட் செய்ய நேர்ந்தால் அவர் நிச்சயம் எதிர்முனையில் என்னை விட கூடுதலாக பவுண்டரிகள் அடிக்கும் வீரரைத்தான் அவர் விரும்புவார் என்று நினைக்கிறேன். அவருடன் நீண்ட நாட்களுக்குப் பிறகு சேர்ந்து ஆடியது நன்றாக இருந்தது.

 

நான் நிறைய பயிற்சி எடுக்கிறேன், அவசரப்படாமல் நிதானமாக இருப்பது என்பது ஒரு திறமை. நிறைய அனுபவமும் கைகொடுக்கிறது. இதுதான் கிரிக்கெட்டில் கடினமான ஒரு திறமை.  மேட்சை பினிஷ் செய்து வெற்றி அணியின் அங்கமாக இருப்பது நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது.  பவர்பிளேயிலும், முன்னால் இறங்கி ஆடுவதும் ஒரு சவால்..  நடுவில் இறங்கி பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் போது ஆடுவது வேறொரு சவால். எதிரணி மீது நெருக்கடியை ஏற்படுத்துவது நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது.

 

கடைசி ஓவரில் 7 ரன்கள் எனும்போது எந்த நெருக்கடியும் இல்லை. எனக்கும் தோனிக்கும் தெரியும் ஒரே அடிதான் வெற்றிக்கு அருகில் என்பது...பவுலர்களுக்கும் தெரியும் அவர்கள் நெருக்கடியில் உள்ளனர் என்பது. 6 மிகச்சிறந்த பந்துகளை அவர் வீசியாக வேண்டும். ஒரு தவறு செய்தாலும் அவர் மீது பாய்ந்து விடுவோம் என்பதும் பவுலருக்குத் தெரியும். அதுவும் முதல் பந்தில் தோனி அடித்த சிக்ஸ் அபாரம்” என்றார் தினேஷ் கார்த்திக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x