Last Updated : 27 Jan, 2019 03:31 PM

 

Published : 27 Jan 2019 03:31 PM
Last Updated : 27 Jan 2019 03:31 PM

நிறவெறிப்பேச்சு : பாக். கேப்டன் சர்பராஸ் மீது ஐசிசி அதிரடி நடவடிக்கை

தென் ஆப்பிரிக்க வீரர் அன்டில் பெகுல்க்வேயோவை பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட் நிறவெறியுடன் பேசிய விவகாரத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், அடுத்த 4 போட்டிகளுக்கு விளையாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து பாகிஸ்தான் விளையாடி வருகிறது. டர்பனில் நடந்த 2-வது ஒருநாள் போட்டியின் போது, பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட் களத்தில் பேட் செய்துகொண்டிருந்த தென் ஆப்பிரிக்க வீரர் பெகுல்க்வாயோவை நோக்கி, நிறவெறியுடன் பேசினார்.அப்போது, “ஏய் கருப்புப் பயலே, உன் அம்மா எங்கே? உனக்காக என்ன பிரார்த்தனைச் செய்ய கூறினாய்” என்று சர்பராஸ் அகமெட் பேசியது ஸ்டம்ப் மைக்கில் கேட்க சர்ச்சை கிளம்பியது, சர்பராஸ் மீது கடும் கண்டனங்கள் குவிந்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சர்பராஸ் அகமெட் செயலைக் கடுமையாகக் கண்டிக்க சர்பராஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டார்:

’’ஆட்டத்தின் போக்கில் ஏற்பட்ட வெறுப்பில் பேசிய என் வார்த்தைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால் நான் அவர்களிடம் நேர்மையுடன் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். என் வார்த்தைகள் எந்த ஒரு நபரையும் குறிப்பிட்டு நோக்கியதல்ல.யாரையும் வருத்தமடையச் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சகோதரத்துவ உணர்வுடன் செயல்படுவேன்’’ எனத் தெரிவித்தார்.

மேலும் தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர்  பெகுல்க்வேயோவை நேரடியாகச் சந்தித்தும்  தனது மன்னிப்பைக் கேட்டுக்கொண்ட சர்பராஸ் அகமெட் அவருடன் கைகுலுக்கி சமரசமானார். பாகிஸ்தான் கேப்டனை மன்னித்துவிட்டதாகவும், ஆனால், இதை ஐசிசி சும்மாவிடாது என்று தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் தெரிவித்திருந்தார். அதற்கேற்றார்போல், போட்டி நடுவரும் நடந்த சம்பவங்களை அறிக்கையாக ஐசிசியிடம் அளித்திருந்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், ஐசிசி இன்று அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, அடுத்துவரும் 4 போட்டிகளுக்கு பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமெட் விளையாடத் தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்து வரும் 2 ஒரு நாள் போட்டிகளிலும், இரு டி20 போட்டிகளிலும் சர்பாரஸ் அகமெட் விளையாட முடியாது.

இது குறித்து ஐசிசி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் ரிச்சார்ட்ஸன் அளித்த பேட்டியில், " நிறவெறியுடன் நடந்து கொள்வதிலும், பேசுவதிலும் ஐசிசி எந்த விதத்திலும் யாரையும் சமரசம் செய்து கொள்ளாது. சர்பராஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார், தன்னுடைய செயல்பாட்டுக்கு மன்னிப்பு கேட்டு, வெளிப்படையாகவும் மன்னிப்பு கோரிவிட்டார். இதைக் கருத்தில் கொண்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறவெறிக்கு எதிரான விதிமுறைள் பிரிவு 7.3ன்படி, சர்பராஸ் அகமெட் நிறவெறி விழிப்புணர்வு குறித்த பயிலரங்குக்கு செல்ல வேண்டும். இது குறித்து ஐசிசி பாகிஸ்தான் வாரியத்துடன்  கலந்து பேசி எப்போது எப்படி நடத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x