தவறுகள் நடப்பது இயல்பு: பாண்டியாவும், ராகுலும் மனிதர்கள்தானே: சவுரவ் கங்குலி ஆதரவு

தவறுகள் நடப்பது இயல்பு: பாண்டியாவும், ராகுலும் மனிதர்கள்தானே: சவுரவ் கங்குலி ஆதரவு
Updated on
1 min read

ஹர்திக் பாண்டியாவும், கே.எல். ராகுலும் மனிதர்கள்தானே, தவறுகள் நடப்பது இயல்பு, அதைப் பெரிதுபடுத்தக்கூடாது என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் வீரருமான சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்றனர். அப்போது, அவர்கள் இருவரும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தது சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதப்பொருளானது.

இதையடுத்து, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த ராகுல், பாண்டியா இருவரையும் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இருவரும் நாடு திரும்ப உத்தரவிட்டு, ஒரு வாரத்துக்குள் விளக்கம் அளிக்கக் கோரியது.

இந்தச் சம்பவத்துக்குப்பின் ஹர்திக் பாண்டியாவின் ஜிம்கானா கிளப் உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது, தனியார் நிறுவனம் ஒன்று விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து நீக்கியது. இதனால், வீட்டுக்குள் முடங்கியே பாண்டியா இருக்கிறார், தொலைப்பேசி அழைப்புகளைக்கூட தவிர்த்து வருகிறார்.

இந்நிலையில், , ஹர்திக் பாண்டியா, ராகுல் பேசியது குறித்தும், நடவடிக்கை குறித்தும் மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியிடம் கருத்துக் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதிலில், “ ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் மனிதர்கள்தானே. மனிதர்கள் என்றால் தவறு செய்வது இயல்பு. இதை நீண்ட நாட்களுக்கு நாம் வளர்த்துக்கொண்டிருக்கக் கூடாது. யார் தவறு செய்திருந்தாலும், நிச்சயம் வருந்துவார்கள் என்று நான் நம்புகிறேன், மனம் திருந்தி சிறப்பான மனிதர்களாக வருவார்கள். ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் நாம் அனைவரும் உணர்வுள்ள மனிதர்கள், உணர்வற்ற, அனைத்து விஷயங்களும் ஆகச்சரியாக முடிவுகள் கிடைப்பதற்கு எந்திரங்கள் அல்ல.  நீங்களும் வாழ்ந்துவிட்டுச் செல்ல வேண்டும், அதேசமயம், மற்றவர்களையும் வாழவிட வேண்டும் “ எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in