Published : 22 Jan 2019 08:27 AM
Last Updated : 22 Jan 2019 08:27 AM

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செரீனாவிடம் வீழ்ந்தார் ஹாலப்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிடம் தோல்வியடைந்தார். இதேபோல் ஆடவர் பிரிவில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், மிலோஸ் ரயோனிச்சிடம் வீழ்ந்தார்.

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியானஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. தொடரின் 8-வதுநாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ், 16-ம் நிலை வீரரான கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்த்து விளையாடினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ரயோனிச் 6-1, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

கால் இறுதியில் ரயோனிச், முதல் நிலை வீரரானசெர்பியாவின் ஜோகோவிச்சுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். ஜோகோவிச் தனது4-வது சுற்றில் 6-4, 6-7 (5-7), 6-2, 6-2 என்ற செட் கணக்கில் 15-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்றது.

8-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி, 23-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கரேனோ பஸ்டாவை எதிர்கொண்டார். இதில் நிஷிகோரி முதல் இரு செட்களை 6-7 (8-10), 4-6 என இழந்

தார். எனினும் அடுத்த 3 செட்களை கடுமையாக போராடி  7-6 (7-4), 6-4, 7-6 (10-8) என கைப்பற்றினார். சுமார் 5 மணி நேரம் 5 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நிஷிகோரி 6-7 (8-10), 4-6, 6-4, 7-6 (10-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

கால் இறுதியில் அவர், 28-ம் நிலை வீரரான பிரான்சின் லூக்காஸ் பவுலியுடன் மோதுகிறார். லூக்காஸ் பவுலி தனது 4-வது சுற்றில் 6-7 (4-7), 6-4, 7-5, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் 11-ம்நிலை வீரரான குரோஷியாவின் போர்னோ கோரிக்கை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப், 16-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை எதிர்த்து விளையாடினார். இதில்முதல் செட்டை செரீனா 6-1 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டை சிமோனா ஹாலப்6-4 என தன்வசப்படுத்த வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் பரபரப்பு நிலவியது.

எனினும் செரீனா வில்லியம்ஸ் தனது அனுபவத்தால் இந்த செட்டை 6-4 என கைப்பற்றினார். முடிவில் ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் 6-1, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் செரீனா 7-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின்கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்கொள்கிறார். கரோலினா பிளிஸ்கோவா தனது 4-வது சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட்டில் 18-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவை எளிதாக வீழ்த்தினார்.

4-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, 13-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 47 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதியில் கால்பதித்தார். கால் இறுதி சுற்றில் அவர், 6-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை எதிர்கொள்கிறார். ஸ்விட்டோலினாதனது 4-வது சுற்றில், 17-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கெய்ஸ் மேடிசனை6-2,1-6, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x