

71 ஆண்டுகள் இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முதலாக அங்கு சென்று வெற்றி பெற்று கொடிநாட்டிய முதல் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி தட்டிச் சென்ற அதே நேரத்தில் , 2011 உலகக்கோப்பை வெற்றியை விட இந்தத் தருணம் உணர்ச்சிகரமானது என்று தெரிவித்துள்ளார்.
“இதுவரை இதுதான் என்னுடைய சிறந்த சாதனை. குவியலில் மேலே இருக்க வேண்டும். 2011 உலகக்கோப்பை அணியில் இருந்தேன், அதாவது அதை வென்ற போது இதற்கு முன்னால் நாம் உலகக்கோப்பையை வெல்லவில்லையே என்ற ஆதங்க உணர்வு இல்லை. நிறைய மூத்த வீரர்களுக்கு நான் கூறும் இந்த உணர்ச்சி, உவகை இருந்தது. எனவே அவர்களுக்கு அதுதான் “நாங்கள் இதைச் சாதித்தோம்” என்ற கணமாக இருந்தது.
எனக்கும்தான் உலகக்கோப்பையை வென்ற அணியில் இருந்தது எனக்கும் உற்சாகமான ஒரு தருணமே. ஆனால் எந்தத் தருணம் கூடுதல் உணர்ச்சிகரமானது என்று என்னைக் கேட்டால், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதைத்தான் கூறுவேன். நான் இங்கு 3வது தொடராக வருகிறேன், கள அனுபவத்தை வைத்துக் கூறுகிறேன் இங்கு வெல்வது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும்.
ஆகவே அந்தப் பார்வையில் இது எனக்கு உணர்ச்சிகரமான தருணமாகும். வரலாறு உண்மையில் முக்கியத்துவம் வாய்ந்தது, (இதற்கு முன்பாக மற்ற இந்திய அணி பற்றி கேட்டதற்கு ‘வரலாறு முக்கியமல்ல’ என்று கோலி கூறியதை நினைவில் கொள்க), கடந்த 12 மாதங்களாக ஒரு அணியாக நாங்கள் ஆடியது இந்தப் பெருமைமிக்க தருனத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் வரலாற்றை மாற்றுவது, வரலாறு உருவாக்குவது பற்றி நான் இப்போது கூட சிந்திக்கவில்லை (இங்கும் ஒரு முரண்பாடு: ஆஸி.க்கு வந்து ஆடிய முந்தைய இந்திய அணி பற்றிய கேள்விக்கு கோலி, அவர்கள் வெற்றி பெறத்தான் ஆடியிருப்பார்கள், ஆனால் வரலாற்றை மாற்றுவது பற்றி சிந்தித்திருக்க மாட்டார்கள்... அதாவது தன் எண்ணம் வெற்றி மட்டுமல்ல வரலாற்றை உருவாக்குவது என்பதாகத் தெரிவித்து விட்டு இப்போது....), கடந்த 12 மாதங்களின் கடின உழைப்புக்குக் கிடைத்த பெரும் திருப்தியாகும் இந்த வெற்றி.
ஏதாவது ஒரு தருணத்தை பிரித்து எடுத்து கேட்டால், மெல்போர்னில் ஹனுமா விஹாரி தொடக்கத்தில் களமிறங்கி புதிய பந்தில் 70 பந்துகள் வரைத் தாக்குப் பிடித்ததே என்று கூறுவேன். இது ஒருவர் 100 அல்லது 70-80 ரன்கள் எடுப்பதற்குச் சமமான பங்களிப்பாகும் (புஜாரா சதங்களை விட ஹனுமா விஹாரியின் அந்த இன்னிங்ஸ் முக்கியம் என்று கூறுகிறாரா?)
இப்படித்தான் நாங்கள் பங்களிப்பை அளவிடுகிறோம் பங்களிப்பு என்பதை ’பெருமைமிக்க வீரர்கள் பலகை’யில் இடம்பெறுவதை பங்களிப்பாக நாங்கள் பார்ப்பதில்லை, (புஜாரா ஹானர்ஸ் பலகையில் கையெழுத்திட்டது நினைவுக்கு வரவேண்டுமே?)
எந்த அணியையும் எங்கும் வீழ்த்துவோம் என்ற தன்னம்பிக்கை எங்களிடையே உள்ளது, இதனை கர்வமாக செருக்குடன் நான் கூறவில்லை. ஒரு வெற்றி ஒன்டர் அல்ல நாங்கள் (இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவில்?).
புள்ளிவிவரங்களை அனைவரும் காணலாம். மே.இ.தீவுகள் வேகப்பந்து வீச்சாளர்கள் சாதனையை முறியடித்துள்ளோம். இந்தியாவிலிருந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சாதனையை முறியடிப்பார்கள் என்று யாரேனும் எதிர்பார்த்ததுண்டா?
ஸ்லிப்பில் நின்று கொண்டு இவர்கள் வீசுவதைப் பார்ப்பதில் எனக்கு உற்சாகமே ஏற்பட்டது. நம்பர் 11 பேட்ஸ்மெனுக்கு மணிக்கு 149 கிமீ வேகத்தில் வீசு என்று பும்ராவிடத்தில் நான் போய் கூறவேண்டியதில்லை” என்றார் விராட் கோலி.