

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் அடித்து பல முக்கியச் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அது குறித்த முக்கிய சுவாரஸ்ய தகவல்கள்
1. ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டித் தொடரில் 200 ரன்களுக்கு மேல் குவித்த ஆசிய அணியைச் சேர்ந்த முதல் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்.
2. ஒரு டெஸ்ட் தொடரில் 20 கேட்சுகளைப் பிடித்து, 200 ரன்களுக்கு மேல் சேர்த்த ஆசிய நாடு அணிகளின் முதல் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்.
3. ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதற்கு முன் இந்திய விக்கெட் கீப்பரின் அதிகபட்சம் 1967-ம் ஆண்டில் பரூக் இஞ்சினியர் சேர்த்த 89 ரன்களாகும். அதை ரிஷப் பந்த் முறியடித்துள்ளார்.
4. வெளிநாடுகளில் சென்று இந்திய அணி விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் குவித்து தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 150 ரன்களுக்கு மேல் குவித்த முதல் விக்கெட் கீப்பரும் ரிஷப் பந்த். தோனி பாகிஸ்தானில் அதிகபட்சமாக 148 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார்.
5. இரு வெளிநாடுகளில் சென்று சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் ரிஷப் பந்த் சதம் அடித்துள்ளார். இதற்கு முன் இதேபோல வெளிநாடுகளில் சென்று சதம் அடித்த விக்கெட் கீப்பர் மே.இ.தீவுகள் விக்கெட் கீப்பர் ஜெப் டியூஜான் ஆவார்.
6. 21 வயது 91நாட்கள் மட்டுமே ஆகும் ரிஷப் பந்த், மிகக் குறைந்த வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 ரன்கள் சேர்த்த இளம் விக்கெட் கீப்பர் ஆவார். இதற்கு முன் ஜிம்பாப்வே விக்கெட் கீப்பர் ததேந்தா தைபு 21 வயது 245 நாட்கள் ஆகியபோது, வங்கதேசத்துக்கு எதிராக 153 ரன்கள் சேர்த்திருந்தார்.
7. ஆசியக் கண்டதைத் விட்டு வெளிநாடுகளில் சென்று அதிகபட்ச தனிநபர் ஸ்கோரை பதிவு செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இதற்கு முன் வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் அதிகபட்சமாக ஸ்கோர் செய்துள்ளார்.
8. ஆஸ்திரேலியத் தொடரில் இதுவரை ரிஷப் பந்த் 350 ரன்கள் சேர்த்துள்ளார். இதன் மூலம் தோனியின் கடந்த கால ஆஸிக்கு எதிரான 348 ரன்கள் சாதனையையும் ரிஷப் பந்த் முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்போது நடந்துவரும் டெஸ்ட் தொடரில் ரன்குவிப்பில் புஜாராவுக்கு அடுத்த இடத்தில் ரிஷப் பந்த் உள்ளார்.
9. 7-வது விக்கெட்டுக்கு ரவிந்திர ஜடேஜாவுடன் சேர்ந்து 204 ரன்களுக்கு மேல் ரிஷப் பந்த் சேர்த்துள்ளார். இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஸ்திரேலயாவில் 7-வது விக்கெட்டுக்கு சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும்.
10. வெளிநாட்டு அணிகளின் விக்கெட் கீப்பர்கள் ஆஸ்திரேலியாவில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த வகையில் தெ ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டி வில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு நவம்பரில் பெர்த்தில் ஆஸிக்கு எதிராக 169 ரன்கள் சேர்த்தார். அதற்கு அடுத்த இடத்தில் ரிஷப் பந்த் 159 ரன்கள் சேர்த்துள்ளார்.