

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி, 45 ரன்கள் சேர்த்ததன் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார்.
நேப்பியரில் இன்று நடந்த முதலாவாது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 157 ரன்களில் ஆட்டமிழந்தது. வெயில் காரணமாக இலக்கு 49 ஓவர்களில் 156 என மாற்றப்பட்ட நிலையில், 34.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்த போட்டியில் விராட் கோலி 5 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டு, 45 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், அவரின் சராசரி 60 ரன்களை எட்டியிருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக ஆட்டமிழந்தார்.
இருந்தபோதிலும், அவர் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்த போட்டியில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 10 ஆயிரத்து 430 ரன்களை எட்டி மே.இ.தீவுகள் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடித்தார்.
லாரா 299 ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 405 ரன்கள் சேர்த்து 10-வது இடத்தில் இருந்தார். இப்போது கோலி அவரை முறியடித்து, 10 ஆயிரத்து 430 ரன்கள் சேர்த்து லாராவை பின்னுக்கு தள்ளி 10-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த மைல்கல்லை கோலி தனது 220 போட்டிகளில் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆயிரம் ரன்களைக் கடந்த இந்திய வீரர்கள் 5-வது வீரராகவும், அதிகபட்ச ரன்கள் குவித்தவர்களில் சர்வதேச அளவில் 10-வது வீரராகவும் கோலி உள்ளார்.