Published : 23 Jan 2019 05:04 PM
Last Updated : 23 Jan 2019 05:04 PM

‘கண்ணை மூடிக்கொண்டு தடுக்கிறார்...’ - எப்படி வீச வேண்டும்?- மீண்டும் தோனியின் ஆலோசனை

பொதுவாக இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகள் நடந்தால் விராட் கோலி ஏதோ பெயருக்குத்தான் கேப்டன் தோனிதான் களவியூகம் அமைக்கிறார், பவுலர்களுடன் பேசுகிறார் என்ற செய்திகள் சிறிது காலமாக வலம்வரத்தொடங்கியுள்ளன.

 

இவையெல்லாம் எல்லா விக்கெட் கீப்பர்களும் தங்களது பவுலர்களுக்குச் சொல்வதுதான். ஆனால் தோனி சொன்னால் அது ‘சிறப்பு’ வாய்ந்ததல்லவா? அப்படித்தானே ரசிகர்கள் உருவாக்கப்படுகின்றனர், தூண்டப்படுகின்றனர்.

 

இன்று நேப்பியரில் நடைபெற்ற போட்டியில் இருமுறை தோனியின் அறிவுரை உதவியது, ஒருமுறை கேதார் ஜாதவ் தவறாக வீசும்போது அவரை அழைத்துப் பேசினார்.  பிறகு ஹென்றி நிகோல்ஸ், குல்தீப்பின் அபாரமான கேட்சுக்கு ஜாதவ்விடம் ஆட்டமிழந்தார்.

 

ஆட்டத்தின் கடைசியில் கேன் வில்லியம்சன், டக்கி பிரேஸ்வெல் இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்திய குல்தீப் யாதவ், பிறகு பெர்குசனையும் தோனி ஸ்டம்ப்டு செய்ய வீழ்த்தினார்.

 

கடைசியில் ட்ரெண்ட் போல்ட் ஆடியது உண்மையில் வேடிக்கையாகவே இருந்தது, அவரே இப்பவோ அப்பவோ என்று ஆடிக்கொண்டிருந்தார், அவரை வீழ்த்த பெரிய ஆலோசனையெல்லாம் தேவையில்லை. 10 பந்துகள் ஆடி 1 ரன் எடுத்தார். இருந்தாலும் தோனி தன் கடமையைத் தவறாது செய்து குல்தீப் யாதவ்வுகு தொடர்ச்சியாக எப்படி போல்ட்டை வீழ்த்துவது என்று ஆலோசனை வழங்கியது ஸ்டம்ப் மைக்கில் கேட்டது.

 

அவர் கூறியதாவது: “அவர் கண்களை மூடிக்கொண்டு தடுத்தாடுகிறார். நீ ரவுண்ட் த விக்கெட்டில் வந்து உன்னுடைய மாற்றுப் பந்தை வீசு” என்றார், குல்தீப் உடனே ரவுண்ட் த விக்கெட் வந்தார். ட்ரெண்ட் போல்ட் மீண்டும் ஒரு வேடிக்கையான தடுப்பாட்ட உத்தியைக் கடைபிடித்தார். பந்து உள்ளே வரும் என்று நினைத்தார், ஆனால் தோனி கூறியது போல் மாற்று பந்தை வீசியதால் பந்து வெளியே திரும்பி வழியில் போல்ட் மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

 

ஸ்லிப்பை நிறுத்தியது, அவரை ரவுண்ட் த விக்கெட்டில் வரச்செய்து வீசச் செய்தது என்று தோனியின் ஆலோசனை பலன் அளிக்க நெட்டிசன்கள் இதைப்பற்றித்தான் பேசி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x