Last Updated : 25 Jan, 2019 09:35 AM

 

Published : 25 Jan 2019 09:35 AM
Last Updated : 25 Jan 2019 09:35 AM

தடை நீக்கம்: நியூசிலாந்து செல்கிறார் ஹர்திக்: திருவனந்தபுரம் செல்லும் கே.எல் ராகுல்.

பிசிசிஐ அமைப்பு நேற்று தடையை நீக்கியதைத் தொடர்ந்து,ஹர்திக் பாண்டியா நியூசிலாந்து சென்று இந்திய அணியில் இணைய உள்ளார்.

அதேபோல மற்றொரு வீரரான கே.எல்.ராகுல் திருவனந்தபுரம் சென்று இந்திய ஏ அணியில் இணைகிறார்.

காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் பெரிய அளவுக்கு விவாதப்பொருளாகி சர்ச்சையானதையடுத்து, இருவரையும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை செய்து, சஸ்பெண்ட் செய்து பிசிசிஐ நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், இருவரும் எப்போது அணிக்குத் திரும்புவார்கள் என்ற நிலை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், இருவரிடம் விசாரணை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றத்தால் நடுவர் ஒருவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இருவர் மீதான தடையையும் நீக்கி நேற்று பிசிசிஐ நிர்வாகம் அறிவித்தது.

உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய், ஹர்திக் பாண்டியா, ராகுல் இருவருக்கும் 2 போட்டிகளுக்கு மட்டும் விளையாடத் தடை விதிக்க முடிவு செய்திருந்தார், அதன்பின் அவர்களை விளையாட அனுமதிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், மகளிர் அணியின் முன்னாள் தலைவர் டயானா எடுல்ஜி உள்ளிட்டோர் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாண்டியா, ராகுல் இருவரும் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதையடுத்து, உச்ச நீதிமன்றம் விசாரணை அதிகாரியை நியமித்துள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ நேற்று பிறப்பித்த உத்தரவில், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய இருவர் மீதான தடை உடனடியாக நீக்கப்படுகிறது. ஆனால், இருவரும் நடுவரின் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவித்தது.

மேலும், எந்த அளவுக்கு விரைவாக ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு மிக விரைவாகப் புறப்பட்டு, இந்திய அணியில் இணைந்துகொள்ள வேண்டும். என்றும், திருவனந்தபுரத்தில் இந்திய ஏ அணியில் கே.எல்.ராகுல் இணைந்து கொள்ளவும் பிசிசிஐ உத்தரவிட்டது. இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி விளையாடி வருகிறது. அதில் கே.எல்.ராகுல் இணைய உள்ளார்

நியூசிலாந்து அணியுடன் மவுண்ட் மவுங்கினில் நாளை 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாடுவது ஏறக்குறைய சந்தகேம்தான். ஆனால், 3-வது ஒருநாள் போட்டியில் ஹர்திக் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x