Published : 04 Jan 2019 12:59 PM
Last Updated : 04 Jan 2019 12:59 PM

கடக்நாத் கோழி சாப்பிடுங்கள் கோலி!- விஞ்ஞானி பரிந்துரை

கடக்நாத் கோழியை சாப்பிடுமாறு கிரிக்கெட் வீரர் கோலிக்கு விஞ்ஞானி ஒருவர் பரிந்துரை கடிதம் எழுதியிருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு க்ரில்டு சிக்கன் என்றால் பிரியம் ஆனால் அதில் கொழுப்பு அதிகம் என்பதால் அதைவிடுத்து சைவ உணவு உண்டு வருவதாக இணையதளத்தில் படித்த விஞ்ஞானி ஒருவர் கோலிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ப்ராய்லர் கோழிக்கு பதிலாக கடக்நாத் வகை நாட்டுக் கோழியை சாப்பிடுமாறு அவர் பரிந்துரைத்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவை கடக்நாத் கோழிகள். இவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வகை கோழிகளின் நிறம் மட்டுமல்ல தசை, எலும்பு என எல்லாமே கறுப்பு நிறமாகவே இருக்கும் என்பதே இதன் தனிச்சிறப்பு. இதில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விராட் கோலி கோழி இறைச்சியை தவிர்த்துவிட்டதாக இணையத்தில் படித்த ஜப்புவா மாவட்டத்தி க்ரிஷி விக்யான் கேந்த்ராவின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ஐ.எஸ். தோமர், கடக்நாத் கோழியை பரிந்துரைத்து கோலிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தி இந்துவிடம் கூறும்போது, "கோலிக்கு க்ரில்டு சிக்கன் என்றால் பிடிக்கும். ஆனால் அதில் கொழுப்பு சத்து அதிகமாக இருப்பதால் சிக்கனை விடுத்து அவர் சைவ உணவு சாப்பிடுவதாகக் கேள்விப்பட்டேன். இந்திய அணியினர் அனைவரும் சைவ உணவை பின்பற்றுவதாகவும் கேள்விப்பட்டேன். அதனால் அவருக்கு கடக்நாத் கோழியின் சிறப்பு பற்றி கடிதம் எழுதினேன்.

கடக்நாத் வகையிலான கறுப்புக் கோழிகள் ஜப்புவா மாவட்டத்தின் ஆதிவாசிகளால் வலர்க்கப்படுகிரது. இதற்கு கடந்த ஆண்டு அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கியது.

இவ்வகைக் கோழிகளின் இறகுகள் மட்டுமல்ல சதை, எலும்பு எல்லாமே கறுப்பாகத்தான் இருக்கும். இவற்றில் கொழுப்பின் விகிதம் 0.73-1.05% மட்டுமே. ஒப்பீட்டு அளவில் மிகக் குறைவு. வழக்கமான வெள்ளை ப்ராய்லர் கோழிகளில் 13-25% அலவுக்கு கொழுப்பு இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் கடக்நாத் கோழிகளில் அதிகளவில் புரதம், இரும்புச் சத்து, அமினோ அமிலம் உள்ளன. இதன் இறைச்சியை சாப்பிடுவதால் புதிய தெம்பும் உற்சாகமும் கிடைக்கும் என மக்கள் நம்புகின்றனர்.  நான் இந்தவகை கோழிகளை 15 ஆண்டுகளாக ஆய்வு செய்திருக்கிறேன். இவற்றின் ஆரோக்கிய பலன் உறுதியானது.

கடக்நாத் சிக்கனுக்கு மாறுவதால் இந்திய அணி சைவ உணவுக்கு மாற வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், கிரிக்கெட் அணி உணவு செலவினம் அதிகரிக்கும். காரணம் நாங்கள் கடக்நாத் சேவல்களை ரூ.800-க்கும் கடக்நாத் கோழிகளை ரூ.700-க்கு விற்கிறோம்.

வியாபாரிகள் இவற்றை சேவலுக்கு ரூ.1500, கோழிக்கு ரூ.1200 என விற்கின்றனர். விலை அதிகமாக இருந்தாலும்கூட இதற்கான மவுசு குறையவில்லை. நாங்கள் எப்போதும் 1000 கோழிகளை இருப்பு வைத்திருப்போம். ஆனால், காத்திருப்போர் பட்டியல் என்னவோ மூன்று, நான்கு மாதங்கள் வரை நீளும்.

கடக்நாத் கோழிகள் பற்றி கோலிக்கும் பிசிசிஐ-க்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன். கோலி சிட்னி டெஸ்டில் இப்போது பிஸியாக இருப்பதால் அது முடிந்தவுடன் பதில் அளிப்பார் என எதிர்பார்க்கிறேன். எனது வேலை தகவலைத் தெரிவிப்பது மட்டுமே" என்றார்.

பிரிஸில்லா ஜெபராஜ், தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x