

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இந்திய நாயகர்கள் பும்ரா, கோலி, புஜாரா என்றால் ஆஸ்திரேலியாவில் ஒரேயொரு நாயகர்தான் அது பாட் கமின்ஸ்.
முதல் இன்னிங்சில் கொஞ்சம் ஆஸ்திரேலியா சரியாக ஆடி 300 ரன்களையாவது எடுத்திருந்தால் 2வது இன்னிங்சில் இந்தியாவை பாட் கமின்ஸ் சொற்ப ரன்களுக்கு மட்டுப்படுத்தியது ஆஸ்திரேலியாவுக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கும், ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சு புதிய பந்தாயினும் பழைய பந்தாயினும் ஆஸ்திரேலிய பந்து வீச்சைக் காட்டிலும் பன்மடங்கு சிறப்பான இடத்தில் உள்ளது என்பதை நிரூபித்தது.
பாட் கமின்ஸ் 2வது இன்னிங்ஸில் காட்டிய தைரியம், உறுதி, உத்தி ஆகியவை முன்னிலை பேட்ஸ்மென்களால் காட்ட முடியவில்லை என்பதே ஆஸ்திரேலிய நடப்பு அணியின் அவல நிலை. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் இன் த மேக்கிங் பாட் கமின்ஸ் தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் இந்திய அணியைப் பாராட்டத் தவறவில்லை.
“மெல்போர்னில் இந்திய அணி அதீதப் பிரமாதமாக ஆடியது. தாங்கள் ஏன் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி என்பதைக் காட்டியது. சிட்னியில் முடிவை மாற்ற அவசமாக இருக்கிறோம். டெஸ்ட் தொடர் 2-2 என்று சமன் ஆவது மிகச் சிறந்த அணிக்கு எதிரான ஒரு சீரிய முயற்சியாகவே இருக்கும், அந்த டெஸ்ட்டுக்காகக் காத்திருக்க முடியவில்லை, ஆர்வமுடன் எதிர்நோக்குகிறோம்” என்று பாட் கமின்ஸ் உறுதிபடக் கூறியுள்ளார்.
இவரது ட்வீட்டுக்கு வாசக எதிர்வினை பலவும் அவரது பவுலிங், பேட்டிங் இரண்டையும் பாராட்டும் விதமாக உள்ளது.
சிட்னி டெஸ்ட் 2019-ம் ஆண்டின் இரு அணிகளுக்குமான முதல் டெஸ்ட, வெற்றியுடன் ஆண்டைத் தொடங்க இரு அணிகளும் விருப்பமாக இருக்கும். அடிலெய்டில் மண்ணைக்கவ்வி பெர்த்தில் எழுச்சி கண்ட ஆஸி. மீண்டும் சிட்னீல் எழுச்சி கொள்ளாது என்று கூறுவதற்கில்லை, ஆகவே ரவிசாஸ்திரி, அடிலெய்ட் டெஸ்ட் முடிந்து கூறினாரே, “பிராக்டீஸ் கிடையாது எல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டு விடுமுறையை எஞ்ஜாய் பண்ணுங்கள்” என்று மீண்டும் ஒருமுறை கூறி அலட்சியம் காட்டாதிருக்க வேண்டும்.