Published : 17 Dec 2018 04:57 PM
Last Updated : 17 Dec 2018 04:57 PM

வெற்றியை நோக்கி ஆஸி: தோல்வியில் இருந்து தப்புமா இந்திய அணி?

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில்  ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், விரைவாக விக்கெட்டுகளை இழந்து, தோல்வியின் பிடியில் இந்திய அணி சிக்கி இருக்கிறது.

வெற்றி இலக்கான 287 ரன்களை துரத்திச் சென்ற இந்திய அணி விரைவாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவைப்படும் நிலையில், கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் மட்டுமே இருக்கிறது.

களத்தில் விஹாரி 24 ரன்களுடனும், ரிஷப் பந்த் 9 ரன்களுடனும் உள்ளனர். இவர்கள் இருவருக்குப் பின் 'டெய்லண்டர்கள்' மட்டுமே இருப்பதால், நாளை ஒரு விக்கெட் வீழ்ந்தாலும் தோல்வி என்பது தவிர்க்க முடியாததாகிவிடும். ஆனால், வெற்றிக்காக அடித்து ஆட முற்பட்டால் அது எந்த அளவுக்கு இந்த ஆடுகளத்தில் கைகொடுக்கும் என்று கூறுவது கடினம்.

ஏனென்றால், கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை 200 ரன்களுக்கு மேல் 6 அணிகள் மட்டுமே சேஸ் செய்துள்ளனர். 124 முறை போட்டிகள் நடந்து 200 ரன்கள் மேல் எந்த முறையும் சேஸிங் செய்யவில்லை.

அதுமட்டுமல்லாமல் இந்த ஆடுகளம் முற்றிலும் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக அமைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் மந்தமாகவும், வெயில் 'சுளீர்' என அடிக்கும் போது, ஆடுகளம் காய்ந்து வேகப்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைத்தும் வருகிறது. கடந்த இரு நாட்களாக உணவு இடைவேளைக்குப் பின்புதான் விக்கெட்டுகள் அதிகமாக வீழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஆதலால், நாளைய போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் உணவு இடைவேளை வரை விக்கெட்டுகளை இழக்காமல் தாக்குப்பிடித்து ரன்கள் சேர்ப்பது அவசியமாகும். அதன்பின் வெற்றிக்கு முயற்சிக்காவிட்டால் கூட டிராவை நோக்கி ஆட்டத்தை நகர்த்த முடியும்.

பெர்த்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கும், இந்திய அணி 283 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

43 ரன்கள் முன்னிலையுடன் நேற்றைய 3-ம்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் பெய்ன் 8 ரன்னிலும், கவாஜா 41 ரன்னிலும் இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

திருப்பம்

உஸ்மான் கவாஜா டெஸ்ட் அரங்கில் தனது 14-வது அரை சதத்தை 156 பந்துகளில் எட்டினார். உணவு இடைவேளேக்குப் பின் ஷமி வீசிய ஓவரில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

முகமது ஷமி வீசிய 79-வது ஓவரில் 5-வது பந்தை அடிக்க முற்பட்டு ஸ்லிப் திசையில் நின்றிருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெய்ன் 37 ரன்களில் வெளியேறினார்.பெய்ன், கவாஜா கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்

காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் பேட் செய்ய வந்த ஆரோன் பிஞ்ச் கிளவுஸில் பந்துபட்டு, ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷமி வீசிய 82-வது ஓவரில் அடுத்த திருப்பம் ஏற்பட்டது. நங்கூரமாக நிலைத்து ஆடிய கவாஜாவை பவுன்ஸ்ர் மூலம் வெளியேற்றினார் ஷமி. ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார் கவாஜா.

அடுத்து கம்மின்ஸ் களமிறங்கினார். பும்ரா வீசிய அடுத்த ஓவரில் கம்மின்ஸ் ஒரு ரன்னில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

ஷமி வீசிய 87-வது ஓவரில் லயன் காதில் பந்துபட்டு கீழே சரிந்தார். அதன்பின் அதே ஓவரில் விஹாரியிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் வெளியேறினார்.

கடைசி விக்கெட்டுக்கு ஸ்டார்க், ஹேசல்வுட் இருவரும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தனர். ஆனால், பும்ராவின் வேகப்பந்துவீச்சில் ஸ்டார்க் 5 ரன்களில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

93.2 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து ஏற்கெனவே 23 ரன்கள் முன்னிலையையும் சேர்த்து இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தியத் தரப்பில் முகமது ஷமி 6 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அதிர்ச்சித் தொடக்கம்

இதையடுத்து, 287 ரன்கள் வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் இன்னிங்ஸைப் போலவே 2-வது இன்னிங்ஸும் அதிர்ச்சியான தொடக்கமாக அமைந்தது. மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரிலேயே கே.எல். ராகுல் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார்.

ஹேசல்வுட் வீசிய 4-வது ஓவரில் புஜாரா 4 ரன்னில் பெயினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் இன்னிங்ஸில் சதமடித்த விராட் கோலி 17 ரன்னில் லயன் பந்துவீச்சில் கவாஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி ஆட்டமிழந்து சென்றபோது, ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சியில் கொண்டாட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.

4-வது விக்கெட்டுக்கு ரஹானே, விஹாரி நிதானமாக பேட் செய்தனர். அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து ரன்களைச் சேர்த்தனர். விக்கெட்டுகளை இழக்காமல் அடித்து ஆட வேண்டிய கட்டத்தில், ரஹானே 30 ரன்களில் ஹேசல்வுட் பந்துவீச்சில் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். களத்தில் விஹாரி 24 ரன்களுடனும், ரிஷப் பந்த் 9 ரன்களுடனும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x