இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன்?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன்?
Updated on
1 min read

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன், டபிள்யு.வி. ராமன் ஆகியோர் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இதில் பெரும்பாலும், கேரி கிறிஸ்டன் நியமிக்கவே அதிகமான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்குப் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் செயல்பட்டுவருகிறார். அந்த அணியிடமிருந்து அதிகமான ஊதியம் கிடைத்துவருவதால், அங்கிருந்து வருவதற்கு கிறிஸ்டன் தயக்கம் காட்டுவதாகவும், அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகளிர் கிரிக்கெட் அணிக்கான பயிற்சியாளரைத் தேர்வுக்கு, முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர், டிரன்ட் ஜான்ஸன், டிமிட்ரி மஸ்கரன்ஹஸ், பிராட் ஹாக், கல்பனா வெங்கடாச்சார் உள்பட 28 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவர்களை முன்னாள் வீரர்கள் கபில்தேவ், அன்சுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட குழு பயிற்சியாளரைத் தேர்வு செய்ய உள்ளது. இந்தக் குழுவினர் கிறிஸ்டன் உள்ளிட்ட 5 பேரை ஸ்கைப் மூலம் நேர்காணல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்தக் குழு இந்த 5 பேரை இருவரைத் தேர்வு செய்து பிசிசிஐக்கு அனுப்ப உள்ளது.

இந்திய அணி 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோது, அப்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை இந்திய அணிக்குப் பயிற்சியாளராக இருந்த கிறிஸ்டன், 2011 முதல் 2013-ம் ஆண்டுவரை தென் ஆப்பிரிக்க அணிக்குப் பயிற்சி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளிர் கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாரின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து, புதிய பயிற்சியாளரைத் தேடிவருகிறது பிசிசிஐ. இதில் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதில், உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய்க்கும், முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in