

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் கேப்டனான ரோகித் சர்மா காயம் காரணமாக விலகியதை அடுத்து ஹர்பஜன், மலிங்கா அல்லது பொலார்ட் கேப்டன் பொறுப்பிற்கு நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் பொலார்டை கேப்டனாக அறிவித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.
பொலார்ட் 2010ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வருகிறார். இவர் மேற்கிந்திய தீவுகளின் 20 ஓவர் அணியான பார்படாஸ் டிரைடெண்ட்ஸ் அணியை தனது கேப்டன்சியில் சாம்பியன் பட்டம் வெல்ல இட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தன் சொந்த அணியை விடுத்து பொலார்ட் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாம்பியன்ஸ் லீகில் விளையாட முடிவெடுத்தார்.
செப்டம்பர் 13ஆம் தேதி, அதாவது நாளை மறு நாள், மொகமது ஹபீஸின் லாகூர் லயன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எதிர்கொள்கிறது.