Published : 06 Dec 2018 04:41 PM
Last Updated : 06 Dec 2018 04:41 PM

இந்தப் பிட்சில் எப்படி வீச வேண்டும்? இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனை தரத் தயாராகும் புஜாரா

அடிலெய்ட் டெஸ்ட்டில் இந்திய அணியின் மானம் காத்த சதத்தை எடுத்த இந்தியாவின் புதிய சுவர் செடேஷ்வர் புஜாரா, தன் டாப் 5 சதங்களில் இந்த சதம் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

அடிலெய்ட் பிட்சின் தாரக மந்திரத்தை உணர்ந்த புஜாரா முதல் 20 ரன்களுக்கு சுமார் 80-90 பந்துகளை எடுத்துக் கொண்டார். பந்து பழசானவுடன் பிட்சும் கொஞ்சம் பேட்டிங்குக்குச் சாதகமானவுடன் அவர் சரளமாக ஆடி கடைசியில் சிக்சர்களெல்லாம் அடிக்க ஆரம்பித்து கடைசியில் பாட் கமின்சின் மிகச்சிறந்த பீல்டிங் மற்றும் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி 123 ரன்களில் வெளியேறினார் புஜாரா. இந்தப் பிட்ச் இரண்டகமாக உள்ளது, இதனால் பேட்டிங் எளிதானதல்ல என்கிறார்.

“இது டீசண்ட் ரன் எண்ணிக்கைதான், பிட்சில் பந்துகள் போதுமான அளவு திரும்புகின்றன. நிச்சயம் அஸ்வினுக்கு இங்கு எடுக்கும். தொலைக்காட்சியில் நீங்கள் பார்க்கும் போது அவ்வளவாக உங்களுக்குத் தெரியாது, ஆனால் விளையாடும் போது பந்துகள் திரும்புகிறது என்பதை நான் உணர்ந்தேன். அப்போதுதான் உணர்ந்தேன் சரளமாக இங்கு பேட் செய்ய முடியாது என்று, நான் இன்றைய என் பேட்டிங் அனுபவத்தின் மூலம் இந்தப் பிட்சி என்ன லைன் மற்றும் லெந்தில் வீசுவது என்பதை நம் வேகப்பந்து வீச்சாளர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.

புற்கள் உள்ளன, சில பந்துகள் சறுக்கிக் கொண்டு வருகிறது. சில பந்துகள் புல்லில் பட்டு நின்று வருகிறது. இரண்டு விதமாக உள்ளது பிட்ச் எனவே பேட்டிங் இங்கு நாம் பார்க்கும் போது நினைப்பது போல் எளிதல்ல.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது டாப் இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. அதாவது டாப் 5-ல் ஒன்று. ஆனால் அணியினர் இது சிறந்த இன்னிங்ஸ் என்று பாராட்டுகின்றனர்.

7வது விக்கெட்டை இழந்தவுடன் ஷாட்களை ஆடத் தீர்மானித்தேன். நானும் அஸ்வினும் கூட்டணி அமைத்தோம் அஸ்வின் ஆட்டமிழந்தவுடன் அடித்து ஆடுவது சிறந்தது என்று முடிவெடுத்தேன்.  இங்கு நல்ல வெயில் அடிக்கிறது, இந்தியாவில் நமக்கு இது பழக்கம்தான் என்றாலும்....” என்றார் புஜாரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x