2019 ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா?- என்ன சொல்கிறது பிசிசிஐ

2019 ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடத்தப்படுமா?- என்ன சொல்கிறது பிசிசிஐ
Updated on
1 min read

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியும், மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் வருகிறது என்பதால் இந்தியாவில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

2009, 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டி நடந்தபோது மக்களவைத் தேர்தலும் நடந்ததால், போதுமான அளவுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதனால், குறிப்பிட்ட சில போட்டிகள் மட்டும் தென் ஆப்பிரிக்காவிலும், அரபு நாட்டிலும் நடத்தப்பட்டது.

அதேபோல இந்தமுறை 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்கும்நேரத்தில், ஐபிஎல் போட்டியும் நடத்தப்பட உள்ளது. இதனால், பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஐபிஎல் வட்டாரத்திலோ தென் ஆப்பிரிக்கா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை இந்தியாவிலேயே நடத்துவதற்காகக் கடந்த சில வாரங்களாக பிசிசிஐ அதிகாரிகள் தீவிரமாக முயற்சி எடுத்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசுடனும் பேச்சு நடத்தி வருகின்றனர்.

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் ஏலத்தின் இடையே பிசிசிஐ இடைக்கால செயலாளர் அமிதாப் சவுத்ரியிடம் 'தி இந்து' (ஆங்கிலம்) சார்பில் ஐபிஎல் போட்டி எங்கு நடத்தப்படும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில், ''ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறையும் ஐபிஎல் போட்டியும், மக்களவைத் தேர்தலும் ஒரே நேரத்தில் வருகின்றன. இதனால் பாதுகாப்பு பிரச்சினைகளுக்காகப் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆனால், இதை சில அணி நிர்வாகத்தினர் விரும்பவில்லை.

2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியையும் அவர்கள் வெளிநாடுகளில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆதலால், 2019-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை இந்தியாவிலேயே நடத்துவதற்குத் தேவையான உறுதியான முயற்சிகள் எடுத்து வருகிறோம். உள்நாட்டில் ஐபிஎல் போட்டி நடத்துவதைத்தான் அணி நிர்வாகத்தினரும் விரும்புகிறார்கள். மத்திய அரசுடன் பேச்சு நடத்தும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டோம்'' எனத் தெரிவித்தார்.

மத்திய அரசிடம் பேசப்படும் விவரங்களைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டபோதிலும், மத்திய அரசை சமாதானம் செய்து, தேர்தல் தேதிக்கும், போட்டிக்கும் இடையே இடைவெளி இருக்கும் வகையிலும், தேர்தல் தேதியும், போட்டியும் ஒரேநேரத்தில் நடக்காமல் இருக்கும் அட்டவணையை மாற்றவும் பேச்சு நடத்தி வருகிறது எனத் தெரியவந்தது.

இதற்கிடையே பிசிசிஐ சார்பில் ஒரு குழு இன்று மத்திய அரசின் பிரதிநிதிகளைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வாக்குப்பதிவு நடக்கும் நாட்கள், முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் போது பாதுகாப்பு குறைபாடுகள் நடக்காமல் இருக்கவும், போட்டித் தேதிகளை மாற்றவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in