

இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களை மட்டும் உற்பத்தி செய்யவில்லை, தரமான வேகப்பந்து வீச்சாளர்களையும் உற்பத்தி செய்வதாக முன்னாள் ஆஸி. வேகப்பந்து வீச்சு லெஜண்ட் டெனிஸ் லில்லி தெரிவித்தார்.
ஒரு காலத்தில் எதிரணி பேட்ஸ்மென்களின் தலைக்கு விலை வைத்த டெட்லி பவுலர் ஜெஃப் தாம்சன். இவரும் லில்லியும் பல அணிகளுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஜஸ்பிரித் பும்ரா எனக்கு ஆர்வமூட்டுகிறார். குறைந்த தூரம் ஓடி வந்து வீசுகிறார். நடையும் ஓட்டமுமாகத் தொடங்கி பிறகு குறைந்த தூரத்திலிருந்து அதிக வேகத்தில் அவரால் வீச முடிகிறது. அவரது தோள்களும் நேராக இருக்கிறது. அவரது பந்து வீச்சு வேகப்பந்து வீச்சுக்கான இலக்கணங்களில் அடங்குவதல்ல. ஆனால் அவருக்கு அது பலனளிக்கிறது. அவர் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களிடமிருந்து வேறுபட்டவர்.
என்னுடைய காலத்தில் என்னுடன் வீசிய தாம்சனை இவர் எனக்கு நினைவூட்டுகிறார். ஆனால் இவர் ஜேஃப் தாம்சன் அளவுக்கு அதிவேகமாக வீசுவதில்லை, ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, இலக்கணங்களை இருவரும் கடைப்பிடிக்கவில்லை என்ற அளவில் இருவரும் எனக்கு ஒன்று போல் தெரிகிறது.
4 வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவிலிருந்து ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடுகின்றனர் என்பது எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளிக்கிறது, இந்தியா தற்போது வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்களை களத்துக்குக் கொண்டு வருகிறது.
நான் கொஞ்சம்தான் இந்த 4 பவுலர்களையும் பார்த்தேன், பார்த்தவரையில் சிறப்பாக வீசுகின்றனர். இந்தத் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் வீசியது என்னை மிகவும் கவர்ந்தது. இன்னும் கொஞ்சம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்க வேண்டும்.
இரு அணிகளிலும் நல்ல வேகப்பந்து உள்ளது, ஆனால் ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமான தினத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு நேதன் லயன் மூலம் நல்ல அதிர்ஷ்டம் அடிக்கிறது.
மெல்போர்னில் இரு அணிகளுமே 3 வேகப்பந்து ஒரு ஸ்பின்னுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கிறேன், அஸ்வின் ஒரு சிறந்த ஸ்பின்னர் அவரையும் ஆவலுடன் மெல்போர்னில் எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு கூறினார் டெனிஸ் லில்லி.