Last Updated : 26 Dec, 2018 12:23 PM

 

Published : 26 Dec 2018 12:23 PM
Last Updated : 26 Dec 2018 12:23 PM

பந்தை சேதப்படுத்த ‘ஐடியா’ கொடுத்தது யார்?- போட்டு உடைத்தார் கேமரூன் பான்கிராப்ட்

தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது பந்தை சேதப்படுத்தும் ஆலோசனையை வழங்கியது யார் என்பது குறித்து அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்ற ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு ஆஸ்திரேலிய அணி பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தப் பயணத்தின் போது இரு அணியினரும் கடுமையாக முதல் போட்டியில் இருந்து வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். இதனால், கேப்டவுனில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவாகி பெரும் சர்ச்சையானது.

இந்தச் சம்பவத்தில் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, ஸ்மித், வார்னருக்கு ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடையும், பான்கிராப்டுக்கு 9 மாதங்கள் தடையும் விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.

இதில் பந்தை உப்புத்தாள் கொண்டு சேதப்படுத்திய பான்கிராப்ட்டுக்கான தடை இன்றுடன் முடிகிறது. இதையடுத்து தனியார் சேனல் ஒன்றில் ஆடம் கில்கிறிஸ்டுடன் நேர்காணலில் பான்கிராப்ட் பங்கேற்றார்.

அப்போது, பந்தை சேதப்படுத்தும் ஆலோசனையை வழங்கியது யார், யார் தூண்டியது, ஊக்கப்படுத்தியது குறித்த கேள்விகளுக்கு அவர் விளக்கமாகப் பதில் அளித்தார்.

இது தொடர்பாக பான்கிராப்ட் கூறியதாவது:

''தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தும் திட்டம் குறித்த ஆலோசனையை வழங்கியது டேவிட் வார்னர்தான். அவர்தான் என்னிடம் இந்த திட்டத்தைக் கூறி அதை அவர் சொல்லும் நேரத்தில் செயல்படுத்தக் கூறினார். அதைத் தவிர வேறு ஏதும் எனக்குத் தெரியாது.

என்னைப் பொறுத்தவரை இந்தத் திட்டத்தில் நான் பொருத்தமானவராக இருப்பேன் என்று அவர்கள் நினைத்தார்கள். என்னுடைய சொந்த ஒழுக்கங்களை, மதிப்புகளைச் சிதைத்துவிட்டு இந்தக் கொடிய, மோசமான முடிவை நான் எடுத்து பந்தை சேதப்படுத்தும் செயலைச் செய்தேன்.

என்னுடைய இந்த முடிவு என்பது என்னுடைய மதிப்புகளைச் சுற்றி எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் என்மீது நம்பிக்கை வைத்து இதைக் கூறினார்கள், மதிப்பாக உணர்ந்தார்கள் என்பதால் இந்த தவறைச் செய்தேன். ஆனால், இந்தத் தவறு வெளியே தெரிந்தால் மகிப்பெரிய விலை கொடுப்போம் என்பதையும் நான் உணர்ந்தேன்.

இந்த தவறுக்கு வேறுயாரையும் பொறுப்பேற்க விடவில்லை. நான்தான் இந்த செயலைச் செய்தேன் என்று பொறுப்பேற்றுக்கொண்டேன். ஏனென்றால், நான்தான் இதில் பலியாடு. எனக்கு இந்தத் தவறை நான் செய்திருக்கலாம் அல்லது செய்யாமல் தவிர்த்திருக்கலாம். என் முன் வாய்ப்பு இருந்தும் நான் தவறு செய்தேன்.

ஒருவேளை நான் வார்னர் கூறிய ஆலோசனைக்கு மறுப்பு தெரிவித்து இருந்தால், அவர் என்னைச் சந்தேகத்தின் அடியில் குழிதோண்டி புதைத்திருப்பார், என்னை எப்போதும் சந்தேகத்தோடு பார்த்திருப்பார். வார்னர் முன் அணியின் நலன் முன்வைக்கப்படவில்லை.

என்னுடைய செயலால் அணியில் உள்ள அனைவரும் தலைகுனிவைச் சந்தித்தார்கள் என்ற வேதனையுடன் படுக்கைக்குச் சென்றேன். அந்த டெஸ்ட் தொடரில் வெல்வதற்கான வாய்ப்பு இருந்தும் என்னுடைய தவறால் அது வீணாகி, கை நழுவிப்போனது.

என்னுடைய தவறு மூலம், ஆஸ்திரேலிய அணியில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் எனக்கு வேதனை அளித்தது ஏனென்றால், உண்மை என்னை மிகவும் அழுத்தியது. ஒருவேளை நான் மேல்முறையீடு சென்றிருந்தால், பல்வேறு உண்மைகள் வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும்''.

இவ்வாறு பான்கிராப்ட் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x