

பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸி. ஸ்லிப் பீல்டர் ஹேண்ட்ஸ்கம்ப் தரையில் பட்டு கேட்ச் எடுத்துவிட்டு முறையாகப் பிடித்ததாக நடுவரைத் திசைத் திருப்ப அவர் அவுட் கொடுத்தார், இதனால் ரீப்ளேயில் ‘சரிவரத் தெரியவில்லை’ என்று டிவி நடுவர் களநடுவர் அவுட் தீர்ப்புக்கு விட்டுவிட்டார்.
விராட் கோலி அவுட் ஆனதால் இந்திய அணி 43 ரன்கள் பின் தங்கிய நிலையில் 283 ரன்களுக்குச் சுருண்டது.
இந்நிலையில் பிஷன் சிங் பேடி முன்னாள் வீரர் உட்பட நெட்டிசன்கள் காய்த்து எடுத்து விட்டனர்.
இந்த டிவி ரீப்ளேயை புகைப்படம் எடுத்து ஆஸி.ஊடகம் ஒன்று ‘கோலி ஹேஸ் டு கோ’ என்று ட்வீட் செய்ய நெட்டிசன்கள் கடுமையாக ஆத்திரமடைந்துள்ளனர்.=
பலரும் நடுவர் தரம் கீழ்த்தரமாகச் சென்று விட்டது என்றும் மேலும் சிலர் 2008 தொடர் போல் மோசடி செய்ய நினைக்கிறார்கள் என்றும், ஆஸ்திரேலியாவுக்கு பிராடு தவிர வேறு தெரியாது என்று சிலரும், வேறு சிலர் கோலியை இப்படி வீழ்த்தினால்தான் உண்டு என்றும் பல்வேறு விதமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதில் முன்னாள் இந்திய கேப்டன் பிஷன் சிங் பேடி கூறும்போது, “எந்த விதத்தில் பார்த்தாலும் தவறு செய்வது மனித இயல்பு, தொழில்நுட்பத்தைக் கையாள்பவர்களும் மனிதர்கள்தானே! ஆனாலும் எங்கெல்லாம், எப்பொதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஏமாற்றும் தீரா வேட்கை கொண்ட மனிதர்களையும் நாம் கழித்துக் கட்டி விட முடியாது. இதை விடுவோம், நான் முழுக்கவும் விராட் கோலியின் இன்னிங்சை ரசித்துக் கொண்டிருந்தேன். அவர் தன் ‘ராஜ’பேட்டிங் பார்மில் இருந்தார். ஆகவே சர்ச்சை தீர்ப்புகளில் கவனம் செலுத்துவதை விட இது சிறந்தது” என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சென்று ஆடும் அணிகளுக்கு இப்படி நடப்பது வாடிக்கையாகி வருகிறது என்று பலரும் சாடி ட்வீட் செய்து வருகின்றனர்.