

பாகிஸ்தான் தேர்வுக்குழுவினரும், அணி நிர்வாகமும் எனது இளைய சகோதரர் உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்துவிட்டனர் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரும், விக்கெட் கீப்பருமான கம்ரான் அக்மல் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டுவிட்ட கம்ரான் அக்மல் மேலும் கூறியதாவது: டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் உமர் அக்மலை தொடர்ந்து விக்கெட் கீப்பராக பயன்படுத்தி வருவதால் அவர் அதிருப்தியில் இருக்கிறார். கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயல் நியாயமற்றது. ஏனெனில் உமரின் முக்கியமான பணி பேட்ஸ்மேன் பணிதான்.
விக்கெட் கீப்பராக செயல்படுவது அல்ல. பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என இரு பொறுப்புகளை கையாள்வதை உமர் விரும்பவில்லை. அது அவருடைய பேட்டிங்கை பாதிக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் வாரியத்திடம் அவர் கூறியபோதும், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் விக்கெட் கீப்பராக செயல்படுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவர் விஷயத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்கிறது. தேர்வாளர்கள், அணி நிர்வாகத்துடன் இணைந்து இளம் வீரர்களை நல்ல முறையில் உருவாக்க வேண்டும்.
அவர்களின் வாழ்க்கையை அழிக்கக்கூடாது. உமர் அக்மல் இப்போதும் இளம் வீரர்தான். அவரை பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த அனுமதித்தால் பாகிஸ்தானுக்காக இன்னும் பல ஆண்டுகள் சிறப்பாக விளையாடுவார் என்றார்.