Last Updated : 17 Dec, 2018 11:11 AM

 

Published : 17 Dec 2018 11:11 AM
Last Updated : 17 Dec 2018 11:11 AM

கோலி, பெய்ன் மீண்டும் மோதல்: ஷமி அபாரம்; ஆஸி. அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழப்பு

பெர்த்தில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் உணவு இடைவேளைக்குப் பின் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்திய அணியின் விராட் கோலியும், ஆஸி.கேப்டன் டிம் பெய்னும் ஏற்கெனவே நேற்று வார்த்தையில் மோதிக்கொண்ட நிலையில், இன்றும் இருவருக்குமிடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

நண்பகல் உணவு இடையேவேளை வரை ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் 245 ரன்கள் முன்னிலையுடன் ஆடி வருகிறது.

பெர்த்தில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 326 ரன்களுக்கும், இந்திய அணி 283 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

43 ரன்கள் முன்னிலையுடன் நேற்று 2-வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி ஆடத் தொடங்கி விரைவாக விக்கெட்டுகளை இழந்தது. 3-ம்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்திருந்தது. களத்தில் பெய்ன் 8 ரன்னிலும், கவாஜா 41 ரன்னிலும் இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

நங்கூரம், திணறல்

kawajpgஅரைசதம் அடித்த ஆஸி. வீரர் கவாஜா : படம் உதவி ட்விட்டர்100 

இருவரும் இன்றைய ஆட்டம் தொடங்கியதில் இருந்து நிதானமாகவே விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களைச் சோதித்தனர். காலை தேநீர் இடைவேளை வரை 19 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தனர்.

களத்தில் நங்கூரமிட்டு ஆடிய உஸ்மான் கவாஜா டெஸ்ட் அரங்கில் தனது 14-வது அரை சதத்தை 156 பந்துகளில் எட்டினார், ஆஸ்திரேலிய அணியும் 200 ரன்கள் முன்னிலை பெற்றது.

அப்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், ஆஸி. கேப்டன் டிம் பெய்னும் திடீரென வார்த்தையில் மோதிக்கொண்டனர். அப்போது, நடுவர் கிறிஸ் கபானே தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டார். கடந்த 2 நாட்களில் இருவரும் 2-வது முறையாக வார்த்தையில் மோதிக்கொண்டனர்.

பெய்னையும், கவாஜாவையும் பிரிக்க கேப்டன் கோலி பந்துவீச்சாளர்களை விஹாரி, இசாந்த், உமேஷ் யாதவ், ஷமி என மாற்றிப் பயன்படுத்தியும் பலன் இல்லை. ஆஸி. பேட்ஸ்மேன்கள் இருவரும் இந்திய பந்துவீச்சாளர்களை சோதிக்கும் வகையில் பேட் செய்தனர்.

உணவு இடைவேளேயின் போது, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 192 ரன்கள் சேர்த்திருந்தது.

திடீர் திருப்பம்

1shamijpgதிருப்புமுனையாக உணவு இடைவேளைக்குப்பின் ஷமி விக்கெட் வீழ்த்திய காட்சி : படம் உதவி ட்விட்டர்100 

உணவு இடைவேளைக்குப் பின் ஷமி வீசிய ஓவரில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

முகமது ஷமி வீசிய 79-வது ஓவரில் 5-வது பந்தை அடிக்க முற்பட்டு ஸ்லிப் திசையில் நின்றிருந்த விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து பெய்ன் 37 ரன்களில் வெளியேறினார்.பெய்ன், கவாஜா கூட்டணி 5-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.

காயத்தில் இருந்து குணமடைந்து மீண்டும் பேட் செய்ய வந்த ஆரோன் பிஞ்ச் கிளவுஸில் பந்துபட்டு, ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.தற்போது கம்மின்ஸ் ஒரு ரன்னிலும், கவாஜா 71 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

ஷமி வீசிய 82-வது ஓவரில் அடுத்த திருப்பம் ஏற்பட்டது. நங்கூரமாக நிலைத்து ஆடிய கவாஜாவை பவுன்ஸ்ர் மூலம் வெளியேற்றினார் ஷமி. ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 72 ரன்னில் ஆட்டமிழந்தார் கவாஜா. அடுத்து கம்மின்ஸ் களமிறங்கினார்.  பும்ரா வீசிய  அடுத்த ஓவரில் கம்மின்ஸ் ஒரு ரன்னில் கிளீன் போல்டாகி வெளியேறினார். ஸ்டார்க் , லயன் இருவரும் களத்தில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x