Published : 10 Dec 2018 04:47 PM
Last Updated : 10 Dec 2018 04:47 PM

‘எல்லோரும் புஜாரா ஆகமுடியாது’: ‘ஸ்லெட்ஜிங்கில்’ ஆஸி.யை மிஞ்சிய ரிஷப் பந்த்

அடிலெய்டில் நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேசியது தற்போது வெளியாகியுள்ளது.

ஸ்டெம்ப் 'மைக்'கை ஆன் செய்து, வர்ணனையாளர்கள் ஒரு ஓவர் முழுவதும் ரிஷப் பந்த் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்தனர். ஆஸ்திரேலிய வீரர்களை அவமதிப்பாகப் பேசவில்லை என்கிற போதிலும்கூட, அவர்களைச் சீண்டும் வகையில் பேசினார்.

ஸ்லெட்ஜிங் என்றாலே ஆஸ்திரேலிய மண்ணில் அந்த நாட்டு வீரர்களை யாரும் மிஞ்சிவிட முடியாது என்று கூறப்படுவதுண்டு. ஆனால், இந்தத் தொடரின் தொடக்கத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி, நாங்களாக எந்த விதமான ஸ்லெட்ஜிங்கிலும் ஈடுபடமாட்டோம். ஆனால், அதேசமயம் ஏதாவது பேசினால் சும்மாவிடமாட்டோம் என்று கூறி இருந்தார்.

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் ஸ்மித், வார்னர் சிக்கியதில் இருந்து பல்வேறு ஒழுக்க விதிகளை ஆஸ்திரேலிய வீரர்கள் கடைப்பிடிக்க அந்நாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது. ஆதலால், இந்த முறை ஸ்லெட்ஜிங் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியினர் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னாள் வீரர்களான பாண்டிங் உள்ளிட்டோர் வழக்கமான ஆஸ்திரேலிய பாணியில் விளையாடுங்கள் என்று அறிவுறுத்தினார்கள்.

டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றிபெறும் தருவாயில் இருந்தபோது, விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் ஆஸ்திரேலிய வீரர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் பேசினார். இந்திய வீரர் அஸ்வின் பந்துவீச, ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் பேட் செய்தார். அப்போது, பின்னால் இருந்த ரிஷப் பந்த் கிண்டலாகவும், கம்மின்ஸை சீண்டுவதுபோலவும் பேசினார்.

ஸ்டெம்பில் உள்ள 'மைக்'கை ஆன் செய்து வர்ணனையாளர்கள் ரிஷப் பந்த் பேச்சைக் கேட்டனர். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “ இங்கு எல்லோரும் புஜாரா ஆகிவிட முடியாது. இங்கு தாக்குப்பிடிப்பது எளிதல்ல. மோசமான பந்தில் சிக்ஸர் அடி பார்க்கலாம், பேட் (பேட் கம்மின்ஸ்)” என்று ரிஷப் பந்த் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x