

ஆகஸ்ட் 3, 2017-ல் கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இலங்கைக்கு எதிராக எடுத்த 132 ரன்கள்தான் அஜிங்கிய ரஹானே எடுத்த கடைசி சதம். ரஹானே அதன் பிறகு 4 முறை அரைசதம் கடந்தும் அதனை சதமாக மாற்ற முடியவில்லை.
2018-ல் இந்தியா வென்ற 3 அயல் வெற்றிகளும் பவுலர்களால் வந்தது. பேட்டிங்கில் விராட் கோலி பெரும்பங்கு வகிக்க ஓரளவுக்கு புஜாரா பங்களித்தார், ஆனால் அடிலெய்ட்டில் அவர் தீர்மானமாக அணியை பேட்டிங்டில் வழி நடத்தினார் என்றால் மிகையாகாது.
ஆனால் ரஹானே 2வது இன்னிங்சில் 70 ரன்கள் எடுத்த பிறகு தன் விக்கெட்டை தூக்கி எறிந்தார். அயல் மண்ணில் கோலி 3 சதங்களையும், புஜாரா 2 சதங்களையும் எடுக்க ரஹானே சதம் எடுக்கவில்லை.
கோலியின் சில முடிவுகளும் இதற்குக் காரணம், தென் ஆப்பிரிக்காவில் தேவையில்லாமல் அவரை ரஹானேவை உட்கார வைத்தார் கோலி, இதுவும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் ரஹானேயின் பேட்டிங்கைப் பாதித்தது.
அடிலெய்ட் டெஸ்ட் முடிந்தவுடன் ரஹானே பேட்டிங்கை கோலி பாராட்டினார். “ரஹானே அச்சமற்ற ஆட்டக்காரர், பவுலர்களை ஆதிக்கம் செலுத்துவதுதான் அவரது இயல்பான ஆட்டம். அடிலெய்ட் 2வது இன்னிங்சில் ஆடியதிலிருந்து அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடினால் நிச்சயம் எதிரணியினரிடமிருந்து விரைவில் ஆட்டத்தைப் பறித்து விடுவார். ஒரு 2 மணி நேர ஆட்டத்தில் டெஸ்ட்டின் போக்கை மாற்றிவிடுவார் ரஹானே” என்று கோலி தற்போது அவரைப் புகழ்ந்து தள்ளுகிறார்.
பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரும் சதம் மட்டும் அவர் கைகளை விட்டு நழுவி வருகிறது, ஒரு சதம் அடித்து விட்டால் அதன் பிறகு அவருக்கு அனைத்தும் சரியாகி விடும், தனிமனித சாதனைக்காகச் சொல்லவில்லை. அவரிடம் உள்ள தரம், இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளில் நல்ல நிலைக்குக்கொண்டு செல்லும், என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஹானே ஸ்பின் பந்து வீச்சில் தடுமாறுகிறார், குறிப்பாக நேதன் லயன் அவரைப் பாடாய்ப்படுத்துகிறார், இதற்கு உரிய உத்தியை அவர் இந்தத் தொடரில் கண்டுபிடிக்கவில்லையெனில் இன்னொரு தொடரை அவர் விரயம் செய்வதோடு, தன் இடத்தையும் ஹனுமா விஹாரியிடம் இழக்க நேரிடும் என்பதை அவர் கவனத்தில் கொள்வது நலம் என்று ஆகாஷ் சோப்ரா, சஞ்சய் மஞ்சுரேக்கர் உள்ளிட்டோர் ஏற்கெனவே எச்சரித்துள்ளனர்.