Last Updated : 13 Dec, 2018 10:48 AM

 

Published : 13 Dec 2018 10:48 AM
Last Updated : 13 Dec 2018 10:48 AM

பெர்த் டெஸ்ட்: 3 பெரிய மாற்றங்களுடன் இந்திய அணி அறிவிப்பு

பெர்த்தில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை தொடங்க இருக்கும் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் திறமையான பந்துவீச்சாலும், புஜாரா, ரஹானேவின் பேட்டிங்கினாலும் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வரலாற்று வெற்றி பெற்றது.

இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியாகும்,

வழக்கமான பெர்த் டபிள்யுஏசிஏ மைதானத்தில் நடைபெறாமல் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆப்டஸ் மைதானத்தில் போட்டி நடக்கிறது. இந்த மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், பந்துகள் நன்கு பவுன்ஸ் ஆகும் என்பதால், பேட்ஸ்மேன்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்.

ஆஸ்திரேலிய அணிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையில் இந்திய அணியிலும் வேகப்பந்துவீச்சும், சுழற்பந்துவீச்சும் அமைந்துள்ளது. ஆனால், அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மா, சுழற்பந்துவீச்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த ரவிச்சந்திர அஸ்வின் ஆகியோருக்குக் காயம் ஏற்பட்டது.

இதனால், கடந்த இரு நாட்களாக இருவரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ரோஹித் சர்மாவுக்கு இடுப்புப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும் பிடிப்பு ஏற்பட்டதால், அவர் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். அஸ்வினுக்கு அடிவயிற்றில் பிடிப்பு ஏற்பட்டதால் அவரும் பயிற்சியில் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே பிரித்வி ஷா கணுக்கால் காயத்தில் இருந்து மீளாத நிலையில், இரு முக்கிய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதனால், பெர்த் டெஸ்ட் போட்டிக்கு அஸ்வின், ரோஹித் சர்மா, பிரித்வி ஷா ஆகியோர் நீக்கப்படுவதாக பிசிசிஐ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.இதற்குப் பதிலாக ரவிந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் ,” பிரித்வி ஷா காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து வேகமாக குணமாகி வருகிறார் என்கிறபோதிலும், இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அஸ்வினுக்கு இடதுபுறம் வயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரோஹித் சர்மா அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பீல்டிங் செய்யும்போது முதுகுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவரும் சிகிச்சையில் இருக்கிறார். ஆதலால், இந்த 3 பேரும் பெர்த் டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படுகின்றனர். இவர்களின் உடல்நிலையைப் பொறுத்து 3-வது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தனது சுழற்பந்துவீச்சால் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலாக இருந்த அஸ்வின் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவாகும். அஸ்வினுக்கு பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ள ரவிந்திர ஜடேஜா பேட்டிங் ஓரளவுக்குச் செய்வார் என்கிறபோதிலும் அஸ்வின் அளவுக்குப் பந்துவீசும் திறமையானவர் என்று கூறிவிட முடியாது.ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளது ஓரளவுக்கு கை கொடுக்கும்.

இந்திய அணி விவரம்:

விராட் கோலி(கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவிந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x