

இளம் பிராயத்தில் தோனி கால்பந்து வீரராகத் திகழ்ந்தார் என்பது தெரிந்திருக்கலாம், ஆனால் பேட்மிண்டன் ஆட்டமும் அவருக்குக் கைவந்த கலைதான்.
பெங்களூருக்கு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் வந்திறங்கிய தோனி, சின்னசாமி ஸ்டேடியத்தின் உள்ளரங்கில் பேட்மிண்டனில் கலக்கினார்.
கர்நாடாக மாநில கிரிக்கெட் சங்க வீரர்கள் சிலருடன் அவர் பேட்மிண்டன் இரட்டையர் ஆட்டங்களில் விளையாடினார். அவர் அதிரடியாக நிறைய ‘ஸ்மாஷ்’களை ஆட அங்கு குழுமியிருந்த சிறிய ரசிகர்கள் கூட்டம் ஆரவாரம் செய்ததாக கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறை சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அவர் வரும்போதும் பேட்மிண்டன் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஆடத் தொடங்கி விடுவார் அவருக்கு பேட்மிண்டன் மீது அலாதிப் பிரியம் உண்டு என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஏற்கெனவே தோனி ஒருமுறை கூறியபோது, தனக்கு ஜிம்மில் சென்று வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்வதில் அவ்வளவு நாட்டமில்லை என்று கூறியிருக்கிறார். பேட்மிண்டன் ஆடினால் கண்பார்வை மற்றும் ரிப்ளெக்ஸ் மேம்பாடு அடைவதோடு, கால்களை நன்றாக நகர்த்துவதிலும் சிறந்த பயிற்சி கிடைக்கிறது என்று அவர் ஏற்கெனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.