

மெல்போர்னில் நாளை தொடங்க உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 5 முக்கியசாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது.
1. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2018-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள் அடித்துள்ளார். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தால், ஒரு ஆண்டில் அதிகமாகச் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் கோலி இடம் பெறுவார்.
2. சச்சின் 2010-ம் ஆண்டில் 7 சதங்கள் அடித்துள்ளார். கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் 6 சதங்களுடன் 2-ம் இடத்தைப் பிடிப்பார்.
3. ஒரு ஆண்டில் வெளிநாட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 82 ரன்கள் தேவைப்படுகிறது. 2002-ம் ஆண்டில் டிராவிட் 1,137 ரன்கள் சேர்த்து சாதனை படைத்துள்ளார். கோலி தற்போது 1065 ரன்களுடன் 2-ம் இடத்தில் உள்ளார்.
4. ஒரு ஆண்டில் டெஸ்ட் போட்டியில் அதிக அளவு ரன் குவித்த கேப்டன்களில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் 1,212 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 156 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் கோலி சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.
5. மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தால், அது டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 27-வது சதமாக அமையும், மேலும், மேற்கு இந்திய ஜாம்பவான் கேரி சோபர்ஸின் சாதனையையும் சமன் செய்வார்.
6. குறிப்பாக ஒரு ஆண்டில் வெளிநாட்டில் அதிக அளவு சதம் அடித்த ஒரேவீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் 1998-ம் ஆண்டு 12 சதங்கள் அடித்துள்ளார். இன்னும் ஒருசதம் அடித்தால், கோலி சச்சினின் சாதனையைச் சமன் செய்துவிடுவார்.
7. ஆஸ்திரேலியாவில் வந்து அதிகமான சதம் அடித்த கேப்டன்கள் என்ற பெயரை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயுடு தக்கவைத்துள்ளார். அவர் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கேப்டனாக இருந்து அவர் அடிக்கும் 5-வது சதமாக அமையும்.