Published : 06 Dec 2018 03:19 PM
Last Updated : 06 Dec 2018 03:19 PM

பேட்டிங் பிட்சில் சொதப்பிய டாப் ஆர்டர்;  தர்மசங்கடத்திலிருந்து காப்பாற்றிய  புஜாராவின் பிரமாதமான  16வது சதம்: இந்தியா 250/9

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் செடேஷ்வர் புஜாராவுக்குச் சொந்தமானது. பந்துகள் புதிதாக இருந்த போது பாறையாக நின்றார், பிறகு விக்கெட்டுகள் போகப்போக சதத்தை நெருங்கும் போதும் சதத்தைக் கடந்த பிறகும் வெடித்து எழுந்தார். இந்திய அணியின் 250/9-ல் புஜாரா மட்டும் 123 ரன்கள்.

மிக அருமையான பேட்டிங்

246 பந்துகளைச் சந்தித்த புஜாரா 7 பவுண்டரிகள் 2 பிரமாதமான சிக்சர்களுடன் 123 ரன்கள் எடுத்து கமின்ஸின் அபாரமான பீல்டிங் மற்றும் நேர் த்ரோவுக்கு ரன் அவுட் ஆக இன்றைய ஆட்டம் முடிந்தது. புஜாராவின் 16வது டெஸ்ட் சதமாகும் இது, மிகவும் இக்கட்டான தருணத்தில் இந்த சதத்தை எடுத்துள்ளார் புஜாரா

இந்திய அணியில் ரோஹித் சர்மா எதிர்த்தாக்குதல் முறையைக் கடைபிடித்து 2 பவுண்டரிகள் 3 பிரமாதமான சிக்சர்களுடன் 37 ரன்கள் எடுத்து நேதன் லயன் போட்ட பிரஷருக்கு இலக்கானார். ரிஷப் பந்த் மிகப்பிரமாதமான ஹை பிளிக் சிக்ஸ் ஒன்றை ஸ்டார்க் பந்தில் அடித்து அவருக்கு அதிர்ச்சி அளித்தார், ஆனால் அவரை கொஞ்சம் அதிகமாக ஸ்டார்க், கமின்ஸ், லயன் ஸ்லெட்ஜிங் செய்ய அவர் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை கைவிட்டு குகைக்குள் சென்றார் இதனால் 25 ரன்களில் லயனின் அற்புத பந்து விழுந்தது, தடுத்தாட முயன்றார் பந்து திரும்பி மெலிதாக எட்ஜ் எடுத்து பெய்னிடம் கேட்ச் ஆனது.

அஸ்வின் (25) புஜாரா ஜோடிதான் இந்த இன்னிங்சில் முதல் அரைசதக்கூட்டணி அமைத்தனர், இருவரும் சேர்ந்து 62 ரன்களை 7வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இவர் இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் இந்திய அணி 300 ரன்களைக் கூட பார்த்திருக்கலாம். ஆனால் கமின்ஸ் வீசிய பந்து அப்படிப்பட்டது காற்றில் உள்ளே வந்து பந்து பிட்ச் ஆன பிறகு வெளியே எடுத்தது அஸ்வினுக்கு இது டூமச் ஹேண்ட்ஸ்கம்பிடம் கேட்ச் ஆனது.

டாப் ஆர்டர்களின் தவறான ஷாட் தேர்வு, தளர்வான ஷாட்களினால் சொதப்பல்:

ஹேசில்வுட், கமின்ஸ் தொடங்கினர், கே.எல்.ராகுல் பதற்றமாக ஆடினார், 2வது ஓவரின் கடைசி பந்து கொஞ்சம் லேட் ஸ்விங் ஆக வெளியே சென்ற பந்துக்கும் அவரது காலுக்கும் மட்டை வந்த விதத்துக்கும் சம்பந்தமேயில்லாமல் ட்ரைவ் ஆட எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் பிஞ்ச்சிடம் கேட்ச் ஆனது. 2 ரன்களில் வெளியேறினார் ராகுல்.

முரளி விஜய்க்கு சிலபல நல்ல பந்துகளை ஹேசில்வுட்டும், மிட்செல் ஸ்டார்க்கும் வீசினர், சோதிக்கும் பந்து வீச்சு.  முதல் பவுண்டரியை விஜய் ஸ்டார்க்கின் வைடு பந்தை விரட்டி பவுண்டரிக்கு அனுப்பினார் அதுவே தேவையில்லாத ஷாட்தான் அதிர்ஷ்டகரமாக இடைவெளியில் காற்றில் சென்றது.

அதன் பிறகு ஸ்டார்க் , விஜய்யை செட்-அப் செய்தார். அதாவது ஷார்ட் பிட்ச் பவுலிங்கை வீசி அவரை பின்னால் போகச் செய்தார், பிறகு ஒரு பந்தை 4வது ஸ்டம்பில் வீசி ஸ்விங் செய்ய தொட்டார் கெட்டார் விஜய். எட்ஜ் ஆகி பெய்ன் கேட்சை எடுத்தார்.

 

கோலி இறங்கினார். 13 பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில் கமின்ஸைக் கொண்டு வந்தார் பெய்ன், இது ஒர்க் அவுட் ஆனது, விராட் கோலி ஃபுல், வெளியே சென்ற பந்தை ட்ரைவ் ஆடும் சபலத்தை விட முடியாமல் ஆடினார். பந்து எட்ஜ் ஆகி கல்லியில் கவாஜாவுக்கு இடது புறம் நல்ல வேகமாகச் சென்றது அவர் பாய்ந்து ஒரு கையில் பிடித்தார், மிகப்பிரமாதமான கேட்ச், திகைபூட்டும் கேட்சில் 3 ரன்களில் கோலி வெளியேறினார், எல்லா பில்ட்-அப்புக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. இந்தக் கேட்ச்களைத்தான் இங்கிலாந்தில் டேவிட் மலான் கோட்டை விட்டனர், கோலி அங்கு பிழைத்தார், இங்கு பிழைக்க முடியவில்லை. ஆனால் கோலி நின்றிருந்தால் இந்தப் பிட்சில் 200 அடித்திருப்பார். ஆனால் ஆஸ்திரேலியாவின் துல்லியம் திட்டமிடுதல், பீல்டிங் கோலியைக் கவிழ்த்தது.

ரஹானே இறங்கி நேதன் லயன் பந்தில் ஷார்ட் லெக்கில் கேட்ச் கொடுத்தார். ஆனால் ஹேண்ட்ஸ்கம்ப் கேட்சைப் பிடிக்கவில்லை.  ஆனால் அதன் பிறகு ஆட்டத்தின் போக்குக்கு எதிராக லயன் பந்தை மேலேறி வந்து மிகப்பெரிய சிக்சரை லாங் ஆனில் அடித்தார். புஜாரா கமின்ஸை ஒரு பேக்புட் பஞ்ச் அடித்து பவுண்டரிக்கு அனுப்பினார், இந்த 2 ஷாட்கள்தான் இதுவரை சிறந்த ஷாட்கள்.  13 ரன்களில் நன்றாக ஆடிவந்த நிலையில் ஹேசில்வுட் வீசிய மிகவும் வெளியே சென்ற பந்தை படுமோசமாக, சோம்பேறித்தனமாக பேட்டை விட்டார் 2வது ஸ்லிப்பில் ஹேண்ட்ஸ்கம்ப் கேட்ச் எடுத்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்தது.

பாறையாக நின்று பிறகு வெடித்தெழுந்த புஜாரா!

புதிய பந்தில் ராகுல் அவுட் ஆன பிறகு வந்த புஜாராவுக்கு சோதனைகள் காத்திருந்தன, பவுன்சர்கள் அவரை ஓரிருமுறைப் பதம் பார்த்தன, ஓரிருமுறை அவரது மூக்கிற்கு பந்து எழும்பியது மட்டையை உயர்த்தியப் போது எட்ஜ் ஆனது ஆனால் பிட்ச் சற்றே மந்தம் என்பதால் அந்த எட்ஜ்கள் கைக்குச் செல்லவில்லை. இதனை மைக்கேல் கிளார்க் வர்ணனையில் மிகச்சரியாகப் பிடித்தார். பெர்த் போன்ற பிட்ச் ஆக இருந்தால் அது கையில் போய் விழுந்திருக்கும்.

தாரகமந்திரத்தை புஜாரா சரியாகக் கடைபிடித்தார். ஆஸ்திரேலிய பிட்ச்களில் உணவு இடைவேளை வரை அவர்கள் பக்கம், அதில் மீண்டு வந்து விட்டால் பிறகு பேட்ஸ்மென்கள் ராஜ்ஜியம்தான், குறிப்பாக முதல் நாள் ஆட்டத்தில், இதனை மிகச்சரியாகக் கணித்து ஆடினார் புஜாரா. ஒரு முறை கட் ஆட முயன்ற போது லேசான எட்ஜ் எடுத்தது ஆஸ்திரேலியர்கள் ரிவியூ செய்யாமல் விட்டனர். 89 ரன்களில் இருந்த போது புஜாரா வெகுண்டு எழுந்தார், ஹேசில்வுட் வீசிய பவுன்சரை பைன்லெக்கில் ஹூக் சிக்ஸ் செய்தார், பிறகு அடுத்த பந்தே மீண்டும் ஷார்ட் பிட்ச் பந்து ஸ்கொயர் லெக் பவுண்டரிக்கு 4 ரன்களானது 99 ரன்கள் என்று வந்த அவர் மிட்செல் ஸ்டார்க்கை மிட் ஆனில் தட்டி விட்டு சதம் எட்டினார். 

விராட் கோலி பிராண்ட் என்பதால் வலையில் அதைச் செய்தார், இதைச்செய்தார் என்று ஊடகங்கள் வியாபாரம் செய்து கொடுக்க எந்த ஒரு நெட் செஷனும் வெளியே தெரியாது ஆடிய புஜாரா கடைசியில் ஆகச்சிறந்த சதத்தை எடுத்ததுதான் இன்றைய ஹைலைட்.  எதிரணியினர் பொதுவாக மீடியா ஹைப்பை வைத்துக் கொண்டு எடைபோடுவார்கள், புஜாராவை அவர்கள் விவாதித்திருக்கவே மாட்டார்கள், இது புஜாராவுக்கு நல்லதாகப் போயிற்று அதனால்தான் அவர் இன்று எதிரணிக்கு அன்னிய மண்ணில் அச்சமூட்டக்கூடிய ஒரு பேட்ஸ்மெனாக மாறியுள்ளார்.

வேகப்பந்து வீச்சை மட்டுமல்ல, அபாயகரமாக வீசிய நேதன் லயனை மிகப்பிரமாதமாக ஆடினார் புஜாரா, கிரீஸை நன்றாக பயன்படுத்தி பின்னால் சென்று தேர்ட்மேன், பைன்லெக்கில் தட்டி விட்டு 2 ரன்களை எடுத்த போதிலும் சரி மேலேறி வந்து தடுத்தாடிய போதிலும் சரி லயன் பந்து வீச்சு அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. புஜாராவின் பொறுமைக்கு ஓர் உதாரணம் ஒரு கட்டத்தில் அவர் 11 ரன்களில் இருந்த போது 29 பந்துகளில் ரன் எதுவும் அவர் எடுக்கவில்லை. இப்படி ஆடிய அவர் சதம் அடித்த பிறகு ஸ்டார்க்கை லெக் பிளிக் ஒன்றில் ஒரு பவுண்டரியும் பிறகு ஒரு அப்பர் கட் சிக்ஸ் பாயிண்டிலும் சிக்சருக்குப் பறக்கவிட்டார்.  கடைசியில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கைத் தக்க வைக்க முடிவெடுத்து ரிஸ்க் சிங்கிள் எடுக்கப்போக கமின்சின் அபார த்ரோவுக்கு 123 ரன்களில் வெளியேறினார், மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸ்.

ரோஹித் சர்மா பாட் கமின்ஸை முதலில் தூக்கி ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் அடித்தார், பிறகு ஒரு குட் லெந்த் பந்தை டி20 பாணியில் கவருக்கு மேல் இன்னொரு சிக்ஸ், பிறகு நேதன் லயனை ஆன் திசையில் ஒரு சிக்ஸ், அதனை மார்கஸ் ஹாரிஸ் கேட்ச் பிடித்தார், ஆனால் அவர் கயிற்றுக்கு வெளியே சென்று விட்டார், சிக்ஸ், கடும் நெருக்கடி போட்ட நேதன் லயன் அடுத்த பந்தை கொஞ்சம் இழுத்து விட்டார், இறங்கி வந்த அவர் மிட்விக்கெட்-மிட் ஆன் இடையே அடிக்கப் பார்த்தார், ஆனால் பந்து லேசாகத் திரும்பியதில் ஸ்கொயர்லெக்கில் பந்து எழும்பியது 37 ரன்களில் ரோஹித் அவுட் ஆனார்.

ரிஷப் பந்த் மிட்செல் ஸ்டார்க் பந்தில் இருமுறை பீட்டன் ஆனபோது அவரை ஸ்லெட்ஜிங் செய்யத் தொடங்கினார் ஸ்டார்க், அதன் பிறகு வீறுகொண்டு எழுந்த ரிஷப் பந்த் ஒரு ஹைபிளிக் சிக்ஸ் அடித்தார் ஒரு பவுண்டரியையும் அடித்தார், ஆனால் ஸ்லெட்ஜிங் நிற்கவில்லை, இதனால் கொஞ்சம் தடுப்பாட்டம் ஆடிய அவரை நேதன் லயன் செட்-அப் செய்தார், அதாவது முழுதும் ஆஃப் திசையில் பீல்டிங்கை நெருக்கினார், ரிஷப் பந்த் ஒன்று லெக் திசையில் ரிஸ்க் எடுக்க வேண்டும், ஆனால் ஸ்லெட்ஜிங்கும் தொடர ஒரு பந்து திரும்பியது முன்னால் வந்து தடுத்தாடிய ரிஷப் பந்தின் மட்டை விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது.

பந்து அவுட் ஆகும் போது கூட புஜாரா 35 ரன்களில்தான் இருந்தார்.  ஆனால் அஸ்வின் (25), இஷாந்த் சர்மா, ஷமி ஆகியோர் உதவியுடன் மிக முக்கியமான சதம் ஒன்றை எடுத்து இந்திய அணியின் மானத்தைக் காப்பாற்றினார். இஷாந்த் சர்மா ஸ்டார்க்கின் இன்ஸ்விங்கருக்கு பவுல்டு ஆனார்.

ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், கமின்ஸ், லயன், ஹேசில்வுட் அனைவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x