Published : 30 Dec 2018 11:22 AM
Last Updated : 30 Dec 2018 11:22 AM

‘உலகின் சிறந்த அணி இந்தியா’: சச்சின் புகழாரம்: பும்ராவுக்கு ஸ்பெஷல் பாராட்டு

மெல்போர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற அபார வெற்றிக்கு மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

மெல்போர்னில் நடந்த பாக்ஸிங்டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்திய அணியின் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டதால் இந்த வெற்றி வசமானது.

மிகப்பெரிய இலக்கை பேட்ஸ்மேன்கள் வழங்க, பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியை இரு இன்னிங்ஸ்களிலும் 20 விக்கெட்டுகளையும் இந்தத் தொடரில் 3-வது முறையாக வீழ்த்தினர்.

இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள், முன்னாள் இந்திய வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் சமூக ஊடகங்கள் வழியாகப் பாராட்டி வருகின்றனர். இதில் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் அபார வெற்றியையும், பும்ராவின் வேகப்பந்துவீச்சையும் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், “ மெல்போர்னில் இந்திய அணி வியத்தகு முயற்சியால் சிறப்பான வெற்றியைப் பெற்று 2-1 என்று டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தார். ஒவ்வொரு போட்டியிலும் பும்ராவின் பந்துவீச்சு செழுமை அடைந்து, கூர்மை பெற்று, வலுவடைந்து வருகிறது. உலகிலேயே மிகச்சிறந்த அணியாக இந்திய அணி திகழ்கிறது என்று உறுதியாகக் கூறுவேன்” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x